

கடந்த 2 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங் களில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந் துள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாமல் போனதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக் கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்டவை வறண்டன. இதனைச் சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கல்குவாரிகள், விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னை மக்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. மழைக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் அளவு 2.28 அடி உயரமும், நீரின் கொள்ளளவு 47 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் செம்பரம்பாக்கம் ஏரியில் 31 மில்லியன் கன அடி நீர் வேகமாக உயர்ந்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி நீரின் அளவு 2.85 அடி உயரமும், நீரின் கொள்ளளவு 78 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தற்போது 253 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. 10 கன அடி நீர் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரியில் நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் மழை தொடரும் பட்சத்தில் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.