Published : 17 Jul 2017 03:49 PM
Last Updated : 17 Jul 2017 03:49 PM

தமிழகத்துக்கு வந்த அந்நிய முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்: அன்புமணி

தமிழகத்துக்கு வந்த அந்நிய முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாக அதிமுக அரசு கூறி வரும் நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும் தமிழகம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தோல்வியடைந்து விட்டதையே இது காட்டுகிறது.

2016-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு மொத்தம் ரூ.2.83 லட்சம் கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீட்டின் அளவு ரூ.8366 கோடி, அதாவது 2.9% மட்டுமே என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2015-ஆம் ஆண்டிலும் இந்தியாவுக்கு இதே அளவில் தான் வெளிநாட்டு முதலீடு வந்தது. ஆனால், அதில் தமிழகத்தின் பங்கு ரூ.36,686 கோடியாக, அதாவது 13.1% ஆக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் அது நான்கில் ஒரு பங்குக்கும் கீழாக குறைந்துள்ளது.

இதே காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் அந்நிய நேரடி முதலீடு ரூ.51,823 கோடியிலிருந்து, ஒரு லட்சத்து 29,697 கோடியாக, அதாவது கிட்டத்தட்ட 3 மடங்காக அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலம் ஈர்த்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு ரூ.16,138 கோடியிலிருந்து ரூ.20,666 கோடியாகவும், ஆந்திர மாநிலத்திற்கு வந்த முதலீட்டின் அளவு ரூ.6794 கோடியிலிருந்து ரூ.14,438 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

குஜராத், ஆந்திரா ஆகிய இரண்டுமே தமிழகத்தை விட சிறிய மாநிலங்கள் எனும் போது, அவற்றை விட மிகக்குறைவான முதலீட்டை தமிழகம் ஈர்த்திருப்பதிலிருந்தே தமிழகத்தின் முதலீட்டை ஈர்க்கும் திறன் எந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்பதை உணரலாம். இது தமிழக வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

நேரடி முதலீடுகள் மட்டுமல்ல, உள்நாட்டு முதலீடும் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த முதலீட்டின் அளவு ரூ.5,000 கோடிக்கும் குறைவாகவே இருக்கும். கடந்த இரு ஆண்டுகளில், தமிழகத்திற்கு வந்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு ரூ.45,052 கோடி மட்டுமே.

ஆக, கடந்த இரு ஆண்டுகளில் தமிழகத்திற்கு வந்த முதலீடுகளின் மொத்த அளவு ரூ. 50 ஆயிரம் கோடி மட்டுமே. கடந்த 2015-ஆம் ஆண்டில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்நாட்டு - வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின்னர் இரு ஆண்டுகள் ஆகியும் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 80 விழுக்காடு வந்து சேரவில்லை என்பது தமிழக அரசின் தோல்வியா... இல்லையா?

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சம்பத், தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். மற்றொரு விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணியும் இதே கருத்தைத் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசின் புள்ளி விவரங்கள் வேறு விதமாக உள்ளன. மத்திய திட்ட ஆணையத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாகக் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் தோல்வியடைந்து விட்ட அரசு, தமிழகத்தில் முதலீடுகள் குவிந்து வருவதாகக் கூறி தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒருவேளை தமிழக அமைச்சர்கள் கூறுவது உண்மை என்றால் அதற்கான ஆதாரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்.

2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.31,706 கோடி மதிப்பில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒற்றைச்சாளர அனுமதி மூலமாக ரூ.14,896 கோடி உட்பட ரூ.46,602 கோடி முதலீடு வந்துள்ளதாகவும், அதன்மூலம் 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு செய்ய 98 நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதாகவும், அதன்மூலம் 4.70 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆக, அதிமுக ஆட்சியில் ரூ.2.88 லட்சம் கோடி முதலீடும், 7.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்க வேண்டும். இந்த இலக்குகள் எட்டப்பட்டனவா? எட்டப்படவில்லை என்றால் இதுவரை எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x