

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 சரிவடைந்தது. இதனால் நடப்பு ஆண்டில் குறைந்தபட்ச விலையான ரூ.19,704-க்கு தங்கம் விற்பனையானது.
கடந்த 2 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.784 குறைந்தது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.2,522-க்கும், சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.20,176-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.59 குறைந்து ரூ.2,463-க்கும், சவரன் ரூ.472 குறைந்து ரூ.19,704-க்கும் விற்பனையானது.
இந்த ஆண்டிலேயே இதுதான் குறைந்தபட்ச விலையாகும். இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி ஒரு சவரன் தங்கம் காலை சந்தை நிலவரப்படி ரூ.19,992 ஆக குறைந்தது. பின்பு மாலையில் ரூ.20,088-க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை திடீர் சரிவு குறித்து மெட்ராஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, ''கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. தற்போது இந்த ஆண்டிலேயே மிகக் குறைந்த அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.19,704-க்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறையும் என்பது எதிர்பார்த்ததுதான். தங்கத்தில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீரென பங்கு சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கி இருப்பதும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து இருப்பதும்தான் தங்கம் விலை சரிவுக்கு முதன்மையான காரணங்களாகும்'' என்றார்.
தங்கம் விலை குறைந்த காரணத்தால் நகைக் கடைகளில் பொது மக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. பலர் இதை சிறந்த வாய்ப்பாக கருதி அதிகளவில் நகை மற்றும் தங்கக் காசுகளாக வாங்கிச் சென்றனர்.
வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 2 குறைந்து ரூ.38.20-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,845 குறைந்து ரூ.35,695-க்கும் விற்பனையானது.
இந்த ஆண்டிலேயே மிகக் குறைந்த அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.19,704-க்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறையும் என்பது எதிர்பார்த்ததுதான்.