

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை நீக்குவது தொடர்பான எங்களின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது.
அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை நீக்குவது தொடர்பான எங்களின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் அதிமுகவின் ஆட்சியும் கட்சியும் செயல்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம்.
கடந்த ஏப்ரலில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சர் களின் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சசிகலா, தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பது என்று முடிவு எடுக்கப் பட்டது. தற்போது வரை அந்த முடி வில் எவ்வித மாற்றமும் இல்லை.
அதிமுகவின் இரு அணிகளை இணைப்பதற்கான முயற்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. எங்கள் தரப்பில் எந்தத் தடையும் இல்லை. ஒரு சிலர் உடன்படாமல் பிரிந்து சென்றாலும் அதிமுகவை இணைப்பதற்கான முயற்சிகள் தொடரும். முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி கட்டுக்கோப்பாக நடந்துவருகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர் தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.