

தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளத்தில் தமிழக அரசின் மானிய திட்டத்தின் கீழ் மிதவை கூண்டில் வளர்க்கப்பட்ட சிங்கி இறால் அறுவடை நேற்று தொடங்கியது. எதிர்பார்த்த மகசூல், விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மிதவைக் கூண்டு
தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளம் கடற்கரை கிராமத்தில் கடலில் மிதவை கூண்டு போட்டு அதில் சிங்கி இறால் வளர்ப்பு தொழிலில் மீனவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மிதவை கூண்டில் சிங்கி இறால் வளர்ப்பு தொழிலுக்கு 100 சதவீத மானிய திட்டத்தை, தமிழக அரசின் மீன்வளத்துறை அறிவித்தது. மிதவை கூண்டு, வலை, சிங்கி இறால் குஞ்சு, அதற்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவு, விற்பனைக்கு ஏற்பாடு என ரூ. 5 லட்சம் மதிப்பிலான மானிய உதவிகளை அரசு வழங்குகிறது.
5 மீனவர்கள் தேர்வு
இத்திட்டத்தின் கீழ் சிப்பிகுளம் கிராமத்தில் ராயப்பன், பனிமயம், அல்பர்ட், தினகரன், ஞானராஜ் ஆதிய 5 மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 5 மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் வளர்ப்பு பணியை மேற்கொண்டனர். கடந்த ஐந்தரை மாதங்களுக்கு முன்பு கூண்டுகளில் சிங்கி இறால் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டன.
இதற்கான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலையம் செய்தது. இந்த ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மாதம் இரண்டு முறை இங்கு வந்து கூண்டுகளை பார்வையிட்டு மீனவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.
அறுவடை தொடக்கம்
மிதவை கூண்டுகளில் வளர்க்கப்பட்ட சிங்கி இறால் அறுவடைக்கு தேவையான வளர்ச்சியை எட்டியதைத் தொடர்ந்து அறுவடை நேற்று தொடங்கியது. மீன்வளத்துறை இணை இயக்குநர் ரீனா செல்வி, உதவி இயக்குநர் பாலசரஸ்வதி ஆகியோர் அறுவடை பணிகளை நேரில் பார்வையிட்டனர். மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி பி.பி. மனோஜ்குமார், முதன்மை விஞ்ஞானி ஐ.ஜெகதீஷ், திட்டத்துக்கான பொறுப்பு விஞ்ஞானி ரஞ்சித் ஆகியோர் பங்கேற்றனர்.
கிலோ ரூ. 1,500 விலை
நேற்று 2 கூண்டுகளில் இருந்த சிங்கி இறால்கள் அறுவடை செய்யப்பட்டன. ஒவ்வொரு கூண்டிலும் சராசரியாக 90 கிலோ எடை கொண்ட சிங்கி இறால்கள் இருந்தன. ஒரு கிலோ சிங்கி இறால் ரூ. 1,500 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், வழக்கமான மகசூல் மற்றும் விலையை விட இது மிகவும் குறைவு என்பதால் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கு மழை இல்லாதது மற்றும் வெப்பநிலை உயர்வு ஆகியவையே காரணம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
வளர்ச்சி குறைவு
சிப்பிகுளத்தை சேர்ந்த சிங்கி இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர் ஆர்.ரெக்ஸன் கூறும்போது, ``வழக்கமாக சிங்கி இறால் நான்கரை மாதங்களில் அறுவடை செய்யப்படும். இந்த ஆண்டு கடந்த சில மாதங்களாக சிங்கி இறால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. இதனால் குறித்த நேரத்தில் அறுவடை செய்ய முடியவில்லை.
ஒரு மாதம் தாமதமாகவே தற்போது அறுவடை செய்யப்படுகிறது. வழக்கமாக ஒரு கூண்டில் 130 முதல் 150 கிலோ வரை சிங்கி இறால் கிடைக்கும். தற்போது 90 கிலோ தான் இருக்கிறது. நான்கரை மாதங்களில் சிங்கி இறால் அறுவடைக்கு தேவையான 250 கிராம் எடையை அடைந்துவிடும். ஆனால், தற்போது ஐந்தரை மாதங்கள் ஆகியும் அதே 250 கிராம் எடையில் தான் சிங்கி இறால்கள் இருந்தன.
விலை வீழ்ச்சி
கடந்த ஆண்டு சிங்கி இறால் கிலோ ரூ. 2000 மற்றும் அதற்கு மேல் தான் விலை போனது. தற்போது ரூ. 1,500-க்கு தான் வியாபாரி வாங்குகிறார். இந்த ஆண்டு மழை பெய்யாமல், வெப்பநிலை அதிகரித்திருப்பதே இதற்கு காரணம். மேலும், அவ்வப்போது மழை பெய்தால்தான் சிங்கி இறால் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்” என்றார் அவர்.