

மதுரை அண்ணாநகர் முதலாவது கிழக்கு மெயின்ரோட்டில் குப்பைத் தொட்டியிலிருந்து 11 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் மதுரையில் பரபரப்பு நிலவியது.
குப்பைத் தொட்டிக்குள் சிலர் குண்டுகளை வீசிச் சென்றதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், குற்றத்தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு (ஓசிஐயூ) எஸ்.ஐ. ஜெய்சங்கர் மற்றும் போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு வெடிகுண்டு நூல் சுற்றியும், 3 வெடிகுண்டுகள் டேப் சுற்றியும் இருந்தன.
இதையடுத்து சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா, அண்ணா நகர் உதவி ஆணையர் சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் பெத்துராஜ், சிவக்குமார் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்தனர். மேலும், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் கவச உடையுடன் அங்கு வந்து கீழே கிடந்த 4 வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் குப்பைத் தொட்டியை சாய்த்து, அதிலுள்ள பொருட்களை வெளியேற்றி சோதனை நடத்தினர். அப்போது மேலும் 7 வெடிகுண்டுகளை கைப்பற்றினர். உடனடியாக வண்டியூர் கண்மாய்க்கு எடுத்துச் சென்று வெடிகுண்டுகளிலுள்ள மருந்து பொருள்களை ஆய்வு செய்தபின் அழித்தனர்.
வீசியவரே தகவல் கொடுத்தார்
இதற்கிடையே வெடிகுண்டு களை வீசிச் சென்றவரே அதுபற்றி போலீஸாருக்கு தகவல் தெரிவித்த விவரம் வெளியாகியுள்ளது. இது பற்றி போலீஸார் கூறியதாவது:
சென்னை மாங்காடு பகுதியில் 3 நாட்களுக்கு முன் ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த பிரவீன், மேல பொன்னகரத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன், தூத்துக் குடியைச் சேர்ந்த அந்தோணி, கோவில்பட்டியைச் சேர்ந்த காளிராஜன் ஆகியோரைப் பிடித்து சென்னை தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது வரிச்சியூரைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் ஆட்கள், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்தவதற்காக 25 நாட்டு வெடிகுண்டுகளை விலை கொடுத்து வாங்கிச் சென்றதாகவும், அவற்றை தற்போது மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த கீரிமணி என்பவர் வைத்திருப் பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து கீரிமணியை சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றோம். இதையறிந்த அவர் வெடிகுண்டு களை குப்பைத் தொட்டிக்குள் வீசிவிட்டு, அதுபற்றிய தகவலை உளவுத் துறை போலீஸ் அதிகாரிக்கு செல்போனில் தெரிவித்துவிட்டு தப்பிவிட்டார்.
அதன்பேரிலேயே வெடிகுண்டு களைக் கைப்பற்றி விசாரித்து வருகிறோம். கீரிமணியை தேடிவருகிறோம் என்றனர்.