Published : 02 Feb 2014 02:12 PM
Last Updated : 02 Feb 2014 02:12 PM

மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திய கம்யூ. கூட்டணி: ஜெயலலிதா அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், அதிமுக அணியில் கூட்டணி தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும்

மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோரைக் கொண்ட குழு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு நடந்தது.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற விவரங்கள் பின்னர் முடிவு செய்யப்படும். வரும் தேர்தலில் அமைதி, வளமை மற்றும் முன்னேற்றம் என்ற அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே லட்சியமாகும்.

அமைதி, வளமை மற்றும் முன்னேற்றம் என்ற தாரகமந்திரத்துடன், எங்கள் அணி வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றிபெறுவோம். கூட்டணி குறித்து பேச்சு நடத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், நானும் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளோம்" என்றார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வடசென்னை, நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய 3 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியது. அதில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட பி.லிங்கம் வெற்றி பெற்றார்.

அதேபோல் மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் கோவையில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x