Published : 27 Jul 2017 05:06 PM
Last Updated : 27 Jul 2017 05:06 PM

வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும்: முத்தரசன்

வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை திருத்தி அமைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வங்க நாவலாசிரியர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, ஆனந்த மடம் என்ற நூலில் இடம் பெற்றுள்ள, 'வந்தே மாதரம்' பாடலை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வாரம் ஒருமுறையேனும் பாட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியல்ல என்பதோடு, இந்திய மக்களின் ஒற்றுமை மேலும் சிதைக்கவே உதவும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கருதுகிறது. பன்மைத்தன்மை கொண்ட சமூக இணக்கத்தின் மீது விழுந்த பேரிடியாகவே கருத வேண்டியுள்ளது.

வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி பற்றிய வழக்கில், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது வழக்கிற்கு சம்பந்தமில்லாத விஷயமாகும். இந்தத் தீர்ப்பு, ஏற்கெனவே சமுதாயத்தில் பிளவையும், விரோதத்தையும் விதைப்பவர்களுக்கு பெரும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது என்றே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

உருவ வழிபாட்டை ஏற்காத கோடிக்கணக்கான இஸ்லாமிய சமுதாய மக்களின் மத நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானதாக இப்பாடல் அமைந்துள்ளதை நீதிமன்றம் காணத் தவறியது துரதிர்ஷ்டமாகும். நாட்டு மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய கட்டத்தில் இத்தகைய ஒரு தீர்ப்புவந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இப்பாடலைப் பாடவிரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தாலும், மதவெறி சக்திகள் இதனைத் தவறாகப் பயன்படுத்த வாயப்புள்ளது என்பதை மறுத்துவிட முடியாது.

இந்த உத்தரவு நான்கு வாரத்திற்குள் அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனபதிலிருந்தே, இது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற உள்ளர்த்தம் தொனிக்கிறது என்றே கருதத் தோன்றுகிறது. எனவே, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை திருத்தி அமைத்து வழங்க வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x