

டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றது தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமானவரித் துறையிடம் இருந்து கடிதம் வரவில்லை என உயர் நீதிமன்ற கிளையில் தலைமை செயலர் நேற்று மனு தாக்கல் செய்தார்.
டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்ய வும், அவர் மீதான தடை செய்யப் பட்ட குட்கா, பான்மசாலா விற் பனைக்கு லஞ்சம் பெற்றது தொடர் பான புகார் குறித்து சிபிஐ விசா ரணைக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை மாவட்ட ஏஐடியூசி செயலர் கதிரேசன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு ஜூலை 17-ல் விசாரணைக்கு வந்தபோது மனு தாரரின் வழக்கறிஞர் கண்ணன் வாதிடும்போது, ‘தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனைக்கு அமைச்சர், காவல் துறை அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சம் வழங்கப்பட்டதாக தமிழக அரசுக்கு மத்திய வருமான வரித் துறை கடந்த ஆண்டு ஜூலை 7-ல் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் டி.கே.ராஜேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றார்.
பின்னர் வாதிட்ட தலைமை அரசு வழக்கறிஞர் முத்துகுமாரசுவாமி, குட்கா லஞ்ச விவகாரம் தொடர்பாக வருமான வரித் துறையிடம் இருந்து தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ் அனுப்பிய கடிதம் மட்டுமே உள்ளது. அதில் டி.கே.ராஜேந்திரன் பெயர் இல்லை. இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்குவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந் நிலையில், தலைமைச் செய லர் கிரிஜா வைத்தியநாதன் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘இந்த வழக்கில் குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 9-ல் தமிழக அரசுக்கு வருமான வரித் துறை கடிதம் அனுப்பியதாக மனு தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் கூறுவதுபோல் வருமான வரித் துறையினரிடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை என்பது தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே குட்கா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதத்தை படித்தார். அந்த கடிதத்தை பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முயற்சியில் மனுதாரர் தரப்பு இறங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.