கோயில் நிலத்தில் கழிவுநீர் தேக்கம்: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு

கோயில் நிலத்தில் கழிவுநீர் தேக்கம்: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு
Updated on
1 min read

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கழிவுநீர் செல்லுவதை தடுக்க ஒரு கோடி ரூபாயில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலம் குன்றத்தூர் - குமணன்சாவடி சாலையில் உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பூந்தமல்லி நகராட்சி பகுதியின் சில வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குளம் போல் தேங்கியது. கடும் துர்நாற்றம் வீசியதால் சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. நிலத்தடி நீரும் மாசு ஏற்பட்டது.

எனவே, கழிவு நீரை அகற்று மாறு மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் பொன்னை யாவிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கழிவு நீர் தேங்கிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பேரூராட்சி, நெடுஞ் சாலைத் துறை, சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளைக் கொண்டு ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டத்தை கூட்டினார். இதில் மாநில அரசின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் நிதியின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் காமாட்சி நகரில் இருந்து கால்வாயும் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கழிவு நீரை சுத்திகரித்து பட்டு கூட்டுச் சாலையில் உள்ள கால்வாய் வழியாக போரூர் ஏரிக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் மனோகரன், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் துணை ஆணையர் வான்மதி , பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in