

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக் கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்கக் கோரிய மனு மீது உள்துறை செயலர் 2 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ் வரி உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு: எனது மகன் ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த 26 ஆண்டுகால சிறையில் 3 முறை அவருக்கு பரோல் விடுமுறை வழங்கப்பட்டது.
சொத்து பாகப்பிரிவினைக்காக 2012-ம் ஆண்டில் 15 நாள் பரோலில் விடுதலை செய்யப்பட்டார். அந்த 15 நாளில் அவரை சொத்துப் பங்கீடு தொடர்பாக வழக்கறிஞர்களை சந் திக்கவோ, சொத்தை பார்வை யிடவோ போலீஸார் அனுமதிக்க வில்லை. எனது மகன் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டதால், மீண்டும் பரோல் கேட்பதற்கு உரிமை உண்டு.
எனவே, ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கக் கோரி மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை செயலருக்கும் மனு அனுப்பப்பட்டது. இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரவிச் சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர், ‘பரோல் கோரிக்கையை பரிசீலனை செய்து 2 வாரங்களில் உள்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பிரதான மனு தொடர்பாக மதுரை சிறைத் துறை கண்காணிப்பாளர், 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.