Published : 16 Jul 2017 09:55 AM
Last Updated : 16 Jul 2017 09:55 AM

சித்தா நிறுவனமும் அடையாறு மருத்துவமனையும் இணைந்து புற்றுநோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து, புற்றுநோயாளிகளுக்கு கூட்டு சிகிச்சை அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இடையே சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பக்கவிளைவு ஏற்பட்டவர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் கூட்டு சிகிச்சை முறையில் இணைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இயக்குநர் டி.ஜி.சாகர், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் வி.பானுமதி கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.ஜெ.முத்துக்குமார், துணை கண்காணிப்பாளர் ராதிகா மாதவன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் ஹேமந்த் ராஜ், டி.எஸ்.கணேசன், சாமிநாதன், அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணகுமார், மல்லிகா, கல்பனா, பிரசாந்த் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து தேசிய சித்த மருத்துவமனை நிறுவன இயக்குநர் வி.பானுமதி, ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

இந்த ஒப்பந்தம் மூலம் இரு மருத்துவமனைகளும் இணைந்து, மார்பகப் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியிலும், கூட்டு மருந்து சிகிச்சையிலும் ஈடுபட உள்ளோம். புற்றுநோய் பரவாமல் தடுக்கவும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு சிகிச்சை அளிக்கவும், புற்றுநோய் தொடர்பான பிற நோய்களுக்கு சிகிச்சையில் சித்த மருந்துகள் செயல்படும் விதம் போன்ற பல்வேறு விதமான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

சித்த மருந்துகளின் செயல்பாடு

புற்றுநோயை குணப்படுத்த சித்த மருத்துவ நூல்களில் ஆயிரக்கணக்கான மருந்துகள் உள்ளன. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரசகாந்தி மெழுகு, சண்டமாருத செந்தூரம், இடிவல்லாதி மெழுகு, வான்மெழுகு, நந்திமை போன்ற மருந்துகளைக் கொண்டு புற்று நோயை குணப்படுத்த சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. போரூர் ராமச்சந்திரா மருத் துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, காளாஞ்சக படை (சொரியாசிஸ்), வெண்படை, உயர்அழுத்தம் போன்ற நோய் களுக்கான மருந்துகள் குறித்தும், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துடன் இணைந்து சங்குபற்பம் போன்ற சித்த மருந்துகளின் செயல்பாடு பற்றியும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

சித்த மருத்துவக் கல்வி மேம்பாடு, ஆராய்ச்சி, விலங்கு களிடம் சித்த மருந்துகளின் செயல் பாடுகள், சித்த மருந்துகளின் தரக்கட்டுப்பாடு சம்பந்தமான ஆராய்ச்சி ஆகியவை தொடர் பாக கிண்டியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், வேப்பேரி யில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை அயப்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சென்னை சேத்துப் பட்டில் உள்ள காசநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடனும் புரிந் துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு பல்வேறு பயிற்சி, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x