பருத்தி விளைச்சல் வறட்சியால் கடும் பாதிப்பு: விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலை

பருத்தி விளைச்சல் வறட்சியால் கடும் பாதிப்பு: விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலை
Updated on
2 min read

கடுமையான வறட்சி காரணமாக இந்த ஆண்டு பருத்தி விளைச் சல் பாதிக்கப்பட்டுள்ளது. விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயி கள் வேதனையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கழுகு மலை, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் மானாவாரி சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. இதில் பருத்தி முதன்மையானதாக உள்ளது. இப்பகுதியில் விளையும் பருத்தி கோவில்பட்டி, கடம்பூர் பகுதிகளில் உள்ள ஜின் பேக்டரிகளுக்கு அனுப்பப்படுகிறது.

கிணற்று பாசனம்

கடந்த ஆண்டு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இல்லை. வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனது. இதனால் பருத்தி சாகுபடி பெரும்பாலும் நடை பெறவில்லை. ஓரிரு இடங்களில் மட்டும் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்த னர். ஆனால், அந்த பகுதிகளிலும் மகசூல் சரியாக இல்லை. மேலும், வறட்சியால் பருத்தி தரம் குறைந்து விலையும் சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு பருத்தி இல்லை

கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் பருத்தி கொள்முதல் நிலையம் நடத்தி வரும் எஸ்.ஜோசப் அமலதாஸ் கூறும்போது, “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பருத்தி வியாபாரம் செய்து வரு கிறேன். தூத்துக்குடி, திருநெல் வேலி, விருதுநகர் மாவட்ட விவசாயி கள் பருத்தி கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் முன்பு பருத்தி கொள்முதல் கடைகள் 15 இருந்தன. தற்போது 4-ஆக குறைந்துவிட்டது.

கொள்முதல் செய்யும் பருத்தியை கோவில்பட்டி மற்றும் கடம் பூரில் உள்ள ஜின்னிங் பேக்டரிகளுக்கு விற்பனை செய்கிறோம்.

எனது கடைக்கு தினமும் 15 குவிண்டால் வரை பருத்தி வந்து கொண்டிருந்தது. தற்போது 5 குவிண்டால் தான் வருகிறது. தற்போது ஒரு குவிண்டால் பருத்தி (100 கிலோ) ரூ.4000 முதல் ரூ.4,200 வரை கொள்முதல் செய்கிறோம். கடந்த ஆண்டு ரூ.5,500 வரை விலை இருந்தது. வறட்சியால் பருத்தியின் தரம் குறைந்து காணப்படுவதே விலை குறைவுக்கு காரணம்.

கடந்த 8 ஆண்டுகளாகவே பருத்தி வியாபாரம் நலிவடைந்து வருகிறது. பி.டி. பருத்தி வந்ததால் தான் விளைச்சல் ஓரளவு உள்ளது. நாட்டு பருத்தி வகைகளை பயிரிட்டால் இதுவும் கிடைக்காது. எனவே, தற்போது விவசாயிகள் நாட்டு பருத்தி ரகங்களை பயிரிடுவதில்லை” என்றார் அவர்.

விளைச்சல் ஏமாற்றம்

பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்த திருநெல்வேலி மாவட்டம் கலிங்கபட்டியை சேர்ந்த எம்.ஈஸ்வரன் என்ற விவசாயி கூறும்போது, “கிணற்று பாசனத்தில் ஒரு ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளேன். வேறு எந்த பயிரும் சாகுபடி செய்யாமல், கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் பருத்தி பயிருக்கே பாய்ச்சினேன். வழக்கமாக ஒரு ஏக்கரில் 15 முதல் 20 குவிண்டால் பருத்தி மகசூல் கிடைக்கும். ஆனால், இந்த ஆண்டு 5 முதல் 10 குவிண்டால் தான் கிடைக்கும் நிலை உள்ளது. விலையும் கடுமையாக சரிந்துள்ளது.

வயலை உழுது சரி செய்தது முதல், விதை, உரம், மருந்து மற்றும் பருத்தி எடுக்க கூலி என பெருந்தொகை செலவு செய்துள்ளோம். நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி தான் பயிர் செய்தேன். ஆனால், கடனை திருப்பி செலுத்த கூட மகசூல் கிடைக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் பருத்தி விவசாயமே கேள்விக்குறியாகும்” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in