Published : 02 Jul 2017 09:27 AM
Last Updated : 02 Jul 2017 09:27 AM

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள்: தமிழக எம்.பி., எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்து வாக்கு கேட்டனர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீரா குமார் ஆகியோர் நேற்று ஒரே நாளில் சென்னையில் முகாமிட்டு ஆதரவு திரட்டினர். தமிழக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களை தனித்தனியே சந்தித்து வாக்கு கேட்டனர்.

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை யடுத்து புதிய குடியரசுத் தலை வரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 17-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவை தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டி யிடுகின்றனர். இவர்கள் இருவரும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று எம்.பி., எம்எல்ஏக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆதரவு திரட்டுவதற்காக நேற்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 10.50 மணிக்கு சென்னை வந்த அவரை பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி., தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த், அங்கு பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில முன்னாள் முதல் வரும், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி, தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வந்து ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்கு ராம்நாத் கோவிந்த் நன்றி தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் என்.ரங்கசாமி கூறும்போது, ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்க நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை’’ என்றார்.

அதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யிலான அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க் களை சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பு முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘‘பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளோம். அவரது வெற்றி உறுதி” என்றார்.

அதைத் தொடர்ந்து சேப்பாக் கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு கேட்டார்.


(அடுத்த படம்) ஆதரவு தெரிவிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

மீரா குமார் பிரச்சாரம்

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் பொது வேட் பாளராக போட்டியிடும் மீரா குமாருக்கு திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கோருவதற்காக மீரா குமார் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் நிருபர் களிடம் மீரா குமார் கூறும்போது, ‘‘தமிழக மக்கள் என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். சித்தாந்த போராக மாறியுள்ள இத்தேர்தலில் எனக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்டாலின் வரவேற்பு

பின்னர் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்ற அவரை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘மத்திய அமைச்ச ராக, முதல் பெண் சபாநாயகராக பணியாற்றிய மீரா குமார், அந்த பதவிக்குரிய கண்ணியத்தை காப் பாற்றினார். இந்தியாவின் பன்முகத் தன்மை கோட்பாட்டை நிலை நிறுத்த, வேற்றுமையில் ஒற்றுமை காண, சமூக நீதியின் சங்கநாதம் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒலிப்பதற்காக இத்தேர்தலில் போட்டியிடும் அவரை அனைத்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆதரிக்க வேண்டும்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டு மீரா குமார் பேசும்போது, ‘‘நான் காந்திய வழியில் செல்கிறேன். காந்தி ஆசிரமத்துக்கு சென்று ஆசிபெற்று வந்தேன். காந்திய சிந்தனைகளை நிலை நாட்ட என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்றார்.நிகழ்ச்சி முடிந்ததும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத் துக்கு மீரா குமார் சென்றார். கருணா நிதியை பார்த்துவிட்டு, குடும்பத்தி னரிடம் நலம் விசாரித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x