Last Updated : 11 Jul, 2017 07:06 PM

 

Published : 11 Jul 2017 07:06 PM
Last Updated : 11 Jul 2017 07:06 PM

மூடப்பட்ட அமெரிக்க சர்க்கஸ் கம்பெனி: மூடுவிழாவுக்குத் தயாராகும் இந்திய சர்க்கஸ் கம்பெனிகள்

அமெரிக்காவில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனி மூடப்பட்டதன் தொடர்ச்சியாக இந்திய சர்க்கஸ் கம்பெனிகளும் மூடுவிழா காணும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள் அதில் ஈடுபட்டு வருபவர்கள்.

ஒரு காலத்தில் சர்க்கஸ் கம்பெனிகள் வருகிறது என்றாலே அந்தப் பகுதி மக்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். சிங்கம், புலி, சிறுத்தை, யானை, ஒட்டகம், நீர் யானை என அங்கே வித்தை காட்டாத மிருகங்களே இருக்காது. ஒரு சர்க்கஸ் கம்பெனி ஊருக்குள் வந்திறங்குகிறது என்றால் அதை வேடிக்கை பார்க்கவே ஆயிரக்கணக்கானோர் கூடி விடுவர்.

கிராமத்துவாசிகள் கரும்பு, சோளம் என தான் பயிரிட்ட பயிர்களில் எத்தனை வகை உண்டோ அத்தனையும் கொண்டு வந்து யானைகளுக்கும், குதிரைகளுக்கும் போட்டி போட்டுக் கொண்டு கொடுப்பார்கள். மதியம், மாலை, இரவு என நான்கு காட்சிகள், காட்சிக்கு ஆறாயிரம் ஏழாயிரம் பேர் கூட அமர்ந்து பார்ப்பார்கள்.

இன்றைக்கு அப்படியில்லை. மெல்ல மெல்ல சர்க்கஸ் கலை அழிந்தே விட்டது. அந்தக் காலத்தில் இருபது, முப்பது பெரிய சர்க்கஸ் கம்பெனிகளும், நூற்றுக்கணக்கான சிறிய சர்க்கஸ் கம்பெனிகளும் இந்தியாவில் இருந்தன. இப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே அவை உள்ளன என்பது தேசமறிந்த ரகசியம்.

அவற்றில் பெரிய கம்பெனி என்று பார்த்தால் ஜம்போ சர்க்கஸ், ராயல் சர்க்கஸ், பாம்பே சர்க்கஸ் ஆகிய 3 கம்பெனிகள் மட்டுமே உள்ளன. இவையும் கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற முடிவுக்கு வந்து இழுத்து மூடும் நிலையில் நொண்டியடித்து வருகின்றன.

'1919 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது அமெரிக்காவில் புகழ்பெற்ற ரிங்க்ளிங் பிரதர்ஸ் அண்ட் பர்ணம் & பெய்லி சர்க்கஸ் (Ringling Bros. and Barnum & Bailey Circus). இது கடந்த மே மாதம் 31-ம் தேதி தனது இறுதிக் காட்சியை முடித்துக் கொண்டது. அதற்கும் இந்தியா போலவே மக்கள் ஆதரவும், அரசு ஆதரவும் இல்லாததுதான் காரணம். அரசு சர்க்கஸ் கம்பெனிகளை ஒரு வர்த்தக நிறுவனமாக பார்க்காமல் அதை ஒரு கலையாகவும், தீர விளையாட்டுக்கான விஷயமாகவும் பார்த்து அக்கறை எடுத்து சலுகைகள் அறிவிக்காவிட்டால், எஞ்சியிருக்கிற இந்திய சர்க்கஸ் கம்பெனிகளும் சீக்கிரமே மூடுவிழா காணும்!' என்கிறார் சஞ்சீவ்.

இவர் இந்தியாவின் புகழ்மிக்க சர்க்கஸ் கம்பெனிகளில் ஒன்றான பாம்பே சர்க்கஸ் கம்பெனியின் நிர்வாக பங்குதாரர்களில் ஒருவர். கடந்த ஒரு மாதமாக கோவை வ.உ.சி மைதானத்தில் தன் சர்க்கஸ் கம்பெனியை கடைவிரித்திருக்கும் அவர் தற்போது இந்தியாவில் உள்ள சர்க்கஸ் கம்பெனிகளின் நிலையை விவரித்தார்.

கேரளாவின் தலைசேரி எங்க ஊர். இந்த சர்க்கஸ் கம்பெனியை 1920ல் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் சங்கிலிய (மகாராஷ்டிராவை சேர்ந்தவர்) பாபுராவ் கதம் என்பவர் ஆரம்பிச்சார். அப்போது இந்தியாவில் ஐந்தாறு பெரிய சர்க்கஸ் கம்பெனிகள் இருந்தது. சின்னச் சின்ன கம்பெனிகள் ஐம்பது, அறுபதுக்கும் மேல் இயங்கின. என்னோட தாத்தா கே.எம். குஞ்ஞிக் கண்ணன் 1940ல் இதில் பார்ட்னராக சேர்ந்தார். 1990 வரையிலும் சர்க்கஸ் கம்பெனிகளுக்கு பீக் பீரியடு. எந்த நகரத்தில் டெண்ட்டுகள் போட்டாலும் 3 மாசம், 4 மாசம் சாதாரணமாக ஓடும். சின்னச்சின்ன ஊர்களிலும் கூட முப்பது, முப்பத்தைந்து நாட்கள் நடக்கும். எந்த இடத்திலும் உழைச்ச உழைப்புக்கு மோசம் வராது. இதே தொழிலை அப்பா கே.எம்.பாலகோபாலனும் கவனிச்சார்.

நான் ஊட்டியில் பி.ஏ இங்கிலீஸ் லிட்டரேச்சர் படிச்சேன். சட்டப்படிப்பு படிக்க பூனே செல்லவும் திட்டம் செஞ்சேன். ஆனா அப்பாவுக்கு ஒடம்பு சரியில்லை. நான் கம்பெனிய கவனிக்க வேண்டியதாச்சு. அது 1987 வது வருஷம். அதுக்கு முன்னால வரைக்கும் சர்க்கஸ் கம்பெனிக்கு வருவேன். போவேன். நிர்வாக ரீதியா ஒண்ணும் தெரியாது. ஆனா அதுக்கப்புறம் இதுக்குள்ளே ஒரு கிராமமே இருக்குன்னு அப்படியே ஆழ்ந்துட்டேன். இதுல இருக்கிறவங்க யாரையும் பிரிச்சுப் பார்க்க தோணலை. குடும்பமாவே யோசிச்சேன். அதை விட இங்கிருந்த மிருகங்கள் மேல அபார நேசம்.

(சர்க்கஸில் ஒட்டகங்கள்)

அப்ப பார்த்தீங்கன்னா எங்க சர்க்கஸ் கம்பெனியில மட்டும் 26 யானைகள், 50 குதிரைகள், 15 ஒட்டகங்கள், 2 சிம்பன்சி, 2 கொரில்லா, 1 ஒராங்குட்டான், டால்பின் மாதிரியிருக்கும் ‘சீ லைன்’ (Sea Lion) 4, ஹிப்பு போட்டாமாஸ் என்படும் நீர் யானை 1, நரி 50க்கும் மேல, சிங்கம், புலி எல்லாம் இருந்தது. 1000 பேர் வேலை செஞ்சாங்க. அந்தக் காலத்திலேயே ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம், 60 ஆயிரம் செலவாகும். அந்த டைம்ல ஒரு ஷோவுக்கு 6 ஆயிரம் பேர் உட்கார்ற மாதிரிதான் டெண்ட் அடிப்போம். முதல் ஷோவுக்கு உள்ளூர் கலெக்டர் முதல் அமைச்சர்கள் வரை வந்து ஷோ பார்ப்பாங்க. மெட்ரோ பாலிடன் சிட்டின்னா சொல்லவே வேண்டாம்.

முதல்வர், பிரதம மந்திரி, துணை ஜனாதிபதி எல்லாம் வந்திருக்காங்க. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றவர்களும், இந்திராகாந்தி தன் மக்கள் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தியுடன் குடும்பத்தோடவும் வந்து சர்க்கஸ் பார்த்திருக்காங்க. சாதாரண நாள்ல 3 ஷோ, சனி ஞாயிறுல 4 ஷோ, 5 ஷோ கூட நடத்துவோம். தினசரி டிக்கெட் வசூல் மட்டும் ரூ.1 லட்சத்தை தாண்டும். அப்ப டிக்கெட் ரேட் இத்தனைக்கும் ரூ. 25, ரூ.30 மட்டும்தான். உலகம் முழுக்க எல்லா நாட்டிலிருந்தும் விளையாட்டு வீரர்கள் இருந்தாங்க. 3 மணி நேர ஷோவுல 30 முதல் 40 விதமான விளையாட்டுகளை காட்டுவோம். அப்பவும் மக்கள் சளைக்காம ஷோ பார்ப்பாங்க. காலையில் வந்து க்யூவுல உட்கார்ந்தாங்கன்னா மாலையில் கூட ஷோ பார்த்துட்டு போவாங்க.

இந்த சர்க்கஸ் விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கறதுக்குன்னே கேரளத்தில் சர்க்கஸ் களரி என்று ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதை குருக்கள் களேரி குஞ்ஞிக்கண்ணன் டீச்சரா இருந்து சொல்லிக் கொடுத்தார். அதுல 50 ஆயிரம் பேருக்கு மேல் சர்க்கஸ் வித்தைகள் படிச்சிருக்காங்க. 1940 ம் வருஷம் ஆரம்பிச்ச அதை 20 வருஷம் முன்னாலதான் நிறுத்தினோம். இந்தியாவில் வேற எங்கியும் சர்க்கஸ் சொல்லிக் கொடுக்கிற பள்ளிக்கூடம் இல்லை. இப்பவெல்லாம் யாருக்கும் அந்த அளவுக்கு நேரம் இல்லை. இன்னெய்க்கு சனி, ஞாயிறுல கூட பள்ளிக்கூடம், ட்யூசன் போறாங்க பசங்க. எங்களை தவிர ஜம்போ, ராயல்னு ரெண்டு சர்க்கஸ் கம்பெனிகள்தான் இப்ப இருக்கு. அது எதுவும் சொல்லிக் கொள்ற அளவுக்கு இல்லை. இப்ப எங்க சர்க்கஸ்ல 3 குதிரைகள், 2 ஒட்டகம், பத்திருபது நாய்கள், 20 கிளிகள், 2 ஈமு கோழிகள் மட்டும் இருக்காங்க. விளையாட்டு வீரர்கள் 175 பேர் இருக்காங்க. அதில் 30 பேர் பெண்கள்.

அவங்க எல்லாம் குடும்பம் குடும்பமா இங்கேயெ இருக்காங்க. அவங்களுக்கு வேற தொழில் தெரியாது. முந்தியெல்லாம் இதுல ஈடுபடற குடும்பம் தன் குழந்தைகளையும் சர்க்கஸ் தொழிலிலயே கத்துக்கொடுக்க பழக்கும். இப்ப அப்படியில்லை. எல்லா குழந்தைகளும் அவங்க, அவங்க ஊர்ல ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறாங்க.

இப்ப இந்த தொழிலில் இருக்கிறவங்க போயாச்சுன்னா சர்க்கஸ் பழகவே ஆள் கிடையாது. சர்க்கஸ் பழகுறது சுலபமான காரியமல்ல. அதை அஞ்சாறு, வயசுலயே கத்துக்கணும். அப்பத்தான் பல்டி போட்டா அப்படியே இருக்கும். ஒடம்பு ரப்பர் போல வளையும். அந்த வயசு தாண்டி விளையாடினா எலும்பு, தசையெல்லாம் பலப்பட்டுடும். அதனால பயிற்சி செய்ய முடியாது. அப்படியே செஞ்சாலும் எலும்பு உடைஞ்சிடும் என்றவர் இந்த சர்க்கஸ் தொழிலுக்கு அரசு செய்யும் இடையூறுகளையும் விவரித்தவர் அதில் பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அதாவது சர்க்கஸ் கம்பெனியில் 4 வயது, 5 வயதில் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்தால் அதை குழந்தை தொழிலாளர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள். இந்த தொழிலுக்கும், உடல்நலத்திற்கும் அந்த வயதே தேவை என்பதை உணர்வதில்லை. சர்க்கஸ் பயிற்சியும் ஒரு படிப்பு என அவர்கள் அறிந்து ஊக்கமூட்டியிருக்க வேண்டும். அதே சமயம் பிளாட்பாரங்களில், ரயில் நிலையங்களில், கோயில்களில் ஏகப்பட்ட குழந்தைகள் பிச்சையெடுக்கின்றன. பல தொழிற்கூடங்களில் குழந்தைகள் பணிபுரிகின்றனர். அவற்றையெல்லாம் இவர்கள் பெரிதாக கருதுவதில்லை என்பதே இவரது குற்றச்சாட்டு.

'இதேபோல் காட்டுக்குள் ஏராளமான யானைகள் சாகிறது. ஒரு நாளைக்கு ஒரு யானை சாவு என்பது கண்கூடாக நடக்கிறது. அதை நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் மிருகங்களை துன்புறுத்துகிறோம் என்று யானை, சிங்கம், புலி, சிறுத்தை, நரி என விலங்குகளை எல்லாம் ரெஸ்க்யூ சென்டரில் ஒப்படைக்கச் சொன்னார்கள். நாங்களும் ஒப்படைத்தோம். அங்கே அதை சரியாக பராமரிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. உதாரணமா 2 வருஷம் முன்னால ஆக்ராவில் உள்ள ரெஸ்க்யூ சென்டருக்கு எங்க 3 யானைகளைக் கொடுத்தோம். அதை டிவிஎஸ் கம்பெனிக்காரங்க கோயிலுக்கு கொடுக்க கேட்டாங்க. அப்படி கொடுக்க முடியாதுன்னு இந்திய உயிரியல் பூங்கா (Zoo authority o f india) சொல்லிவிட்டது. எனவேதான் அவங்களுக்கு கொடுக்க வேண்டியதாயிற்று.

(புண்ணாகி காட்சியளிக்கும் பக்காரா யானை)

அந்த யானைகளில் பக்காரா (55 வயது) என்ற யானை நல்ல உடல்நலத்தோடு இருந்தது. அது சில மாதங்களுக்கு முன்பு உடம்பெல்லாம் புண்ணோடு, நோய்வாய்ப்பட்டு தவிப்பதாக அந்த ரெஸ்க்யூ சென்டருக்கு சென்று பார்த்த நண்பர் எனக்கு புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். அது இப்போது இறந்து விட்டதாகவும் தெரிகிறது. இதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டு பல கடிதங்கள் எழுதியும் பதிலில்லை. அதற்காக டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் ஆலோசித்து வருகிறோம்.

இதுபோலவே வண்டலூரு மிருகக்காட்சி சாலைக்கு 32 சிங்கக்குட்டிகள் கொடுத்தோம். அதுவெல்லாம் செத்துப் போச்சு. மைசூர் ஜூவுக்கு 4 சிம்பன்சி கொடுத்தோம். அதுல மூணு செத்துடுச்சு. எங்ககிட்ட வாங்கிட்டு போன மிருகங்களை எல்லாம் வச்சு ரெஸ்க்யூ சென்டர்காரங்க காசு பார்த்தாங்களே ஒழிய அதை சரியா பராமரிக்கலை. எங்ககிட்ட அது இருந்திருந்தா கூட நல்லாயிருந்திருக்கும். அப்படி அதுகளையும் ஒழிச்சு, இந்த சர்க்கஸையும் ஒழிச்சு இவங்க செஞ்ச காரியத்தால் ஒரு உன்னதமான கலையே அழிஞ்சிட்டிருக்கு!' என பொங்கினார்.

கடந்த வருடம் வரை சர்க்கஸ் மூலம் லாபம் வராவிட்டாலும் நஷ்டம் வராமல் இருந்ததாம். ஆனால் பண மதிப்பு நீக்கம் நடந்த பிறகு இந்த தொழிலே படுத்துவிட்டதாம். இந்த ஆண்டில் மட்டும் அதனால் ரூ. 1 கோடி வரை தன் கம்பெனியில் மட்டும் நஷ்டம் என்கிறார் சஞ்சீவ்.

(சஞ்சீவ்)

'கேரளத்தில் ஒரு பள்ளிக்கூடம் வைத்திருக்கிறேன். அதன் மூலம் ஓரளவு வருவாய் வருவதால் இதை சமாளிக்க முடிகிறது!' என்று சொல்லும் அவர், குஜராத் மாநிலத்தில் மட்டும் சர்க்கஸிற்கு என்று பிரத்யேக சலுகைகள் அவ்வரசு தந்து வருவதாக தெரிவிக்கிறார். 'தமிழ்நாட்டில் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ. 16 முதல் ரூ. 18 வரை வாங்குகிறார்களாம். அதுவே குஜராத்தில் ரூ. 5 மட்டும்தானாம். இங்கே சர்க்கஸ் மைதானத்திற்கு ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் கேட்கிறார்கள். அங்கே அது கிடையாது. மைதான வாடகையும் தினம் ரூ. 100 மட்டுமேவாம். கேரளா அரசு சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் தருகிறது. அது வேறெங்கும் இல்லை. தங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை தொழிலாளிகளுக்கு இ.எஸ்.ஐ, பி.எப், நஷ்ட ஈடு என தொழிலாளர்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்குகிறதாம். அப்படி ஓய்வு பெற்று பென்சன் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் வீட்ல உட்கார முடியலைன்னு திரும்ப சர்க்கஸிற்கே வந்து விடுகிறார்கள். அப்படி குள்ள ஜோக்கராகவே விளையாடி வந்த பீகாரை சேர்ந்த துளசிதாஸ் என்பவர் 60 வருடங்களாக இங்கேயே இருக்கிறாராம்.

'நாங்கள் ஒசூர், மைசூர், பாம்பே, அகமதாபாத், அலகாபாத், உதய்பூர், ஜெய்பூர், டெல்லி, சென்னை , மதுரை, திருச்சி, கோவைன்னு மாறி, மாறி போயிட்டே இருப்போம். ஒவ்வொரு நகரத்துலயும் 2 மாசம் இருப்போம். அதில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்தில் டெண்ட்டுகளை கழற்றிக் கொண்டு போய் மாட்ட 2 அல்லது 3 நாட்கள்தான். 4 வது நாளில் ஷோ ஆரம்பித்து விடுவோம். அப்படி செய்தால்தான் தொழிலில் செலவு கட்டுபடியாகும். இல்லாவிட்டால் ஷோ இல்லாத நாளாக இருந்தாலும் தினசரி ரூ. 75 ஆயிரத்திலிருந்து ரூ. 1லட்சம் வரை செலவாகும். அதை சரிக்கட்ட உடனுக்குடனே ஷோ நடத்தியே ஆகணும்.

இப்பவெல்லாம் சர்க்கஸை ஓரளவு நஷ்டப்படுத்தாதவையாக தமிழக நகரங்களே இருந்து வருது. கேரளாவில் கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம்னு 2 வருஷங்களுக்கு முன்பு ஷோ போட்டோம். அங்கே பெரிய மைதானங்கள் கிடைப்பதில்லை என்பதால் அங்கே போறதையே விட்டுட்டோம்!' என குறிப்பிட்டார் சஞ்சீவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x