

நாட்றாம்பள்ளி அருகே அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கிராமப்புற நூலகம் கடந்த 7 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இதேபோல், திருப்பத் தூர், கந்திலி, ஜோலார்பேட்டை ஒன்றியங்களில் பல கிராமப்புற நூலகங்கள் மூடும் நிலையில் உள்ளன.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் ஒரு கிராமப்புற நூலகம், மயான மேம்பாடு, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. கிராமப்புற மாணவர்கள், சிறுவர்கள், இளை ஞர்கள் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் பெரும்பாலான ஊராட்சிகளில் கிராமப்புற நூலகங்கள் அமைக்கப் பட்டன.
இதில், உரிய பராமரிப்பு இல்லாத தால் பெரும்பாலான கிராமப்புற நூலகங்கள் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 1 மைய நூலகம், 67 கிளை நூலகங்கள், 72 நூலகங்கள், 42 பகுதி நேர நூலகங்கள், ஒரு நடமாடும் நூலகம் உள்ளது.
இதுதவிர, ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கிராமப்புற நூலகங்கள் ஏராளமாக உள்ளன. இதில், நூலகப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான நூலகங்கள் மூடியே கிடக்கின்றன. சில இடங்களில் சமூக விரோதக் கும்பல்களில் கூடாரமாகவும் நூலகங்கள் மாறியுள்ளன. கந்திலி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஒன்றியங்களில் நூலகப் பணியா ளர்கள் பற்றாக்குறையால் கிராமப் புற நூலகங்கள் மூடியே கிடக் கின்றன.
வேலூர் மாவட்டம், நாட்றாம் பள்ளி தாலுகா, சந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன கவுண்டனூர் கிராமத்தில் ரூ.3.50 லட்சம் செலவில் கடந்த 2010-11-ம் நிதியாண்டில் கட்டி முடிக்கப்பட்ட கிராமப்புற நூலகம் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது.
பொது அறிவு புத்தகம், இலக்கியம், நாவல், பண்டைய வரலாறு, அறிவியல் புத்தகம், விஞ்ஞானம், கவிதை, போட்டித் தேர்வு, சுற்றுலா, ஆன்மிகம், சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட 300-க்கும் அதிகமாக புத்தகங்கள் இருந்தும், கடந்த 7 ஆண்டுகளாக கிராமப்புற நூலகம் திறக்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. மேலும் அரசுப் பணம் வீணாவதாகக் குற்றஞ்சாட்டினர்.
இதுகுறித்து சின்னகவுண்டனூர் கிராம மக்கள் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். கல்வியில் ஆர்வமிக்க மாணவர்கள் அதிகம் உள்ள சின்னகவுண்டனூர் பகுதியில் கிராமப்புற நூலகம் அமைக்கப் பட்டபோது மகிழ்ச்சியடைந்தோம். இளைஞர்களும் முதியவர்களும் கிராமப்புற நூலகம் திறக்கப் படுவதை ஆர்வமுடன் எதிர்பார்த் தனர்.
ஆனால், கடந்த 7 ஆண்டு களாக கிராமப்புற நூலகம் திறக்கப்படாமல் இருப்பது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது உரிய பதில் இல்லை. மூடிக்கிடக்கும் நூலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கிராமப்புற நூலகங்களை ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு பராமரிக்க வேண்டும் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளம் குறைவாக இருப் பதால் நூலகப் பணிக்கு யாரும் வருவதில்லை. சின்னகவுண்டனூர் கிராமத்தில் உள்ள நூலகத்தை திறக்க பலமுறை முயற்சி செய்தும் அதற்கான ஆட்களை நியமனம் செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இதேபோன்ற பிரச்சினை ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ளது.
கிராமப்புற நூலகப் பணியாளர் களுக்கு அரசு சம்பளத்தை உயர்த்தி வழங்கினால் மட்டுமே மூடிக் கிடக்கும் நூலகங்கள் புத்துயிர் பெறும். இதுதொடர்பாக அரசுக்கு கடிதம் வாயிலாக தெரி விக்கப்பட்டுள்ளது. அதற்கான அர சாணை வெளியானதும் உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.