Published : 14 Jul 2017 11:35 AM
Last Updated : 14 Jul 2017 11:35 AM

தக்காளி என்ன தங்கமா..? விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என்ன?

தங்கத்திற்கு நிகராக தற்போது மதிக்கப்படும் தக்காளியின் விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் என்ன என்பது குறித்து தக்காளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காந்திகிராமம் பல்லைக்கழக ஆராய்ச்சி மாணவர் தன்னுடைய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகப்பட்சமாக ஆந்திராவில் மட்டும் 50 லட்சம் டன் தக்காளி உற்பத்தியாகிறது. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை மாவட்டங்களில் தக்காளி அதிகளவு விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 3 லட்சம் டன் தக்காளி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

தக்காளியை பொறுத்தவரை திடீரென்று கிலோ 2 ரூபாய்க்கும் விற்கிறது. தற்போதைய நிலவரத்தைப் போன்று 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. நிலையற்ற விலை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.

தக்காளியை பற்றியும், அதனு டைய பயன்பாடுகள் பற்றியும் ஆரா ய்ச்சி மேற்கொள்ளும் காந்திகிராம பல்லைக்கழக ஆராய்ச்சி மாண வரும், காஞ்சிபுரம்ஹேன்ட் இன் ஹேன்ட் இந்தியா தொழில்நுட்ப மேலாளருமான எஸ்.அபுபக்கர் சித்திக் கூறியதாவது:

விலை உயர்வு ஏற்பட்டாலோ, மழை பெய்து செழிப்பு அதிகம் உருவானாலோ தக்காளியை விவசாயிகள் ஒரே நேரத்தில் மிகுதியாக சாகுபடி செய்கின்றனர். அப்போது சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி யடைகிறது. இதற்கு விவசாயிகள் துல்லியப்பண்ணை முறையை பின்பற்றாததும், அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பங்களை கடைபிடிக்காததும் ஒரு காரணம்.

வியாபாரிகள், வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்து தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டு வருவதால் இயற்கையாகவே விலை உயர்கிறது. அதனால், தக்காளிக்கு நிலையான விலை நிர்ணயிக்க முடியவில்லை. தக்காளிக்கு மதிப்புகூட்டல் மற்றும் பதப்படுத்தும் தொழிற்கூடங்கள் இல்லாதது, மக்களின் உணவுப்பழக்க வழக்கங்களில் உலர் தக்காளி, தக்காளி பவுடர் இல்லாததும் விலை உயர்வு, வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

தக்காளி உற்பத்தி அதிகமாகி விலை குறைவாக கிடைக்கும்போது அவற்றை ‘சோலார் உலர்த்திகள்’ மூலம் உலர் தக்காளி அல்லது தக்காளி பவுடர் (ஸ்பிரே டிரையர் முறை) தயாரித்து 6 மாதம் முதல் 8 மாதம் வரை பயன்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். தக்காளியில் இருந்து கெட்ச்அப், சாஸ், ஊறுகாய் போன்றவற்றை எளிதாக தயாரிக்கலாம். மரத்தக்காளி அதிகமாக பயிரிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். தற்போதுதான் இவை மலைப்பகுதிகளில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. இவற்றை அரசும், விவசாயிகளும் பின்பற்றினால் தக்காளி விலை உயர்வை தடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தக்காளிக்கு மாற்று மரத்தக்காளி

மரத்தக்காளி (Tanarillo) என்பது ஒரு வகையான சிறுமர காய்கறி பயிர்.

தக்காளிக்கு மாற்று பயிராக இதை பயன்படுத்தலாம். தக்காளியைப் போன்ற சுவையை தரும். தொடர்ந்து 5, 6 ஆண்டுகள் மகசூல் கிடைக்கும். ஆண்டிற்கு இரண்டு சீசனில் காய்க்கும். ஒரே மரத்தில் 15 முதல் 20 கிலோ மரத்தக்காளியை எடுக்கலாம். தமிழகத்தில்

சிறுமலை, கொடைக்கானல், ஊட்டி, தாண்டிக்குடி, உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் அதிகளவு பயிர் செய்யத் தொடங்கியுள்ளனர். தற்போது தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் நிலையிலும், இந்த மரத்தக்காளி கிலோ 10 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்கிறது. 500 மீட்டர் உயரத்தில் இருக்கும் எல்லா பகுதிகளில் இந்த ரகம் வளரும் தன்மை கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x