Published : 06 Jul 2017 08:37 AM
Last Updated : 06 Jul 2017 08:37 AM

பல ஊழல்களை வெளியே கொண்டு வந்துள்ள ஊடகங்கள் மக்களின் ஆயுதமாக செயல்பட வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் விருப்பம்

ஊழல்களை வெளியே கொண்டு வந்துள்ள ஊடகங்கள் மக்களின் ஆயுதமாக செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

புதிய அரசியல் பதிப்பகத்தின் சார்பில் ‘ஊடகம்: அறமும், அரசியலும்’ நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் நூலை வெளியிட, லயோலோ கல்லூரி காட்சித் தொடர்பியல்துறை பேராசிரியர் சுரேஷ்பால் பெற்றுக் கொண்டார்.

பின்னர் ராமதாஸ் பேசியதாவது: ஊடங்களுடன் எங்களுடைய நிரந்தர கூட்டணி இன்றும், என்றும் தொடரும். ஊடகங் கள் குறித்த விமர்சனங்களும், பாராட்டுகளும் இந்த புத்தகத்தில் உள்ளன. ஊடகங்கள் மக்களை வழிநடத்த வேண்டுமே தவிர திசைத் திருப்பக்கூடாது. ஊடகங்கள் மக்களுக்கு ஆயுதமாக செயல்பட வேண்டுமே தவிர சில கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் கேடயமாக இருக்கக்கூடாது. 80-க்கும் அதிகமான ஊழல்களை ஊடகங்கள் வெளியே கொண்டு வந்துள்ளன.

‘தி இந்து’ நாளிதழ் பல ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளது. தற்போது குட்கா ஊழல் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1991 - 96-ல் ஆட்சி செய்தவர்களால் ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இருந்தன. 2001-06 ஆட்சியில் ஊடகங்கள் மீது மட்டும் 500 அவதூறு வழக்குகள் போடப்பட்டன. ‘தி இந்து’ மீது மட்டும் 40-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமைத் தாங்கினார். கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி வரவேற்புரையாற்றினார். அமுதசுரபி மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் ஆகியோர் நூல் குறித்த கருத்துரை வழங்கினர். பசுமைத் தாயகம் செயலாளர் அருள் நன்றியுரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x