

ஜிகா வைரஸால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் ஒய்.பிரகாஷ் (தளி) எழுந்து, ''தளி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்றார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்கள் உள்ளதா என்பதை சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தளி தொகுதியில் எல்லையோர கிராமமான அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார்.
எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில்கூட ஜிகா வைரஸ் தாக்குதலை கண்டறியும் அளவுக்கு தமிழகத்தில் மருத்துவ வசதிகள் உள்ளன. தற்போது ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. நிலைமையை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஜிகா வைரஸால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
கேரள மாநிலத்தையொட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. நோய் தொற்று தடுப்பு விரைவு குழுக்கள் அமைக்கப்பட்டு போதுமான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.