Published : 08 Jul 2017 08:22 AM
Last Updated : 08 Jul 2017 08:22 AM

கோவை கோழிப் பண்ணையில் பணிபுரிந்த அசாம் தீவிரவாதிகள் 2 பேர் கைது: ராணுவ நுண்ணறிவுப் பிரிவினர் அதிரடி

கோவையில் கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்த, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.

அசாமில் தனி மாநிலம் கோரி போடோலாந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடும் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கோவை சித்தநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் பதுங்கி யிருப்பதாக, இந்திய ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அசாம் மாநிலத் தைச் சேர்ந்த, இந்திய ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவு மேஜர் பிரியதர் ஷினி தலைமையிலான அதிகாரிகள், கோவை சூலூர் பகுதியில் முகாமிட்டு, சித்தநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையைக் கண்காணித்தனர்.

அங்கு, அசாம் மாநிலம் சோனிப்பூர் மாவட்டம் பிக்ஜிலி கிராமத்தைச் சேர்ந்த உபன் பசுமத்திரி(41), சங்பூர் தன்வாரி கிராமத்தைச் சேர்ந்த பிக்ராம் பசுமத்திரி(27) ஆகியோர் பணியாற் றுவதும், இவர்கள் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இருவரையும் பிடித்த ராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள், அவர்களை கிணத்துக்கடவு காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று விசாரித்தனர்.

2009-ம் ஆண்டில் போடோ பிரிவினை வாதிகளுக்காக பணம் பறித்த வழக்கில் உபன் பசுமத்திரி சிறை தண்டனை பெற்றவர். விடுதலைக்குப் பிறகு 2010-ல் மியான்மர் ஆயுதப்படைக் குழுவினரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார். தொடர்ந்து போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியில் பிரிவு கமாண்டராகப் பொறுப்பு வகித்தவர். அவரது கூட்டாளியாக இருந்துவந்த பிக்ராம் பசுமத்திரியையும் ராணுவ நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டவராம்.

இருவரும் 2014-ம் ஆண்டு முதல் கோவையில் உள்ள கோழிப்பண்ணை யில் பணியாற்றியது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. சூலூர் நீதிமன்றத்தில் நேற்று இருவரும் ஆஜர்படுத்தப் பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீவிரவாதிகள் புகலிடமா?

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அண்மைக் காலங்களில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 2015-ல் கோவை கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.

சில மாதங்களுக்கு முன் கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சிலர் கைதாகினர். இந்நிலையில், கோவை சூலூரில் போடோலாந்து தீவிரவாதிகள் 2 பேர் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x