

க.பரமத்தி அருகே உப்புப் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் ஒரு மாணவருக்காக 2 ஆசிரியர்கள், 1 சத்துணவு உதவியாளர் பணி யாற்றுகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த உப்புப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், ஆசிரியர் கவிதா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இங்கு அபிஷேக் என்ற 3-ம் வகுப்பு மாணவர் ஒருவர் மட்டுமே பயின்று வருகிறார்.
கடந்தாண்டு அங்குள்ள குவாரிகளில் பணிபுரிந்தவர்களின் குழந்தைகள் உட்பட 7-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்துவந்தனர். பின்னர், குவாரியில் பணியாற்றியவர்கள் வேறு ஊருக்கு சென்றுவிட்டதால், கடந்தாண்டு 4 பேர் மட்டுமே படித்தனர். இதில், 5-ம் வகுப்பு பயின்ற 3 பேர் தேர்ச்சி பெற்று 6-ம் வகுப்பில் சேருவதற்காக வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால், நடப்பாண்டு பள்ளி திறந்ததில் இருந்து ஒரே ஒரு மாணவர் மட்டுமே படித்து வருகிறார். இப்பள்ளிக்கு ஆசிரியர் பயிற்றுநரும் அவ்வப்போது வந்து பார்வையிட்டுச் செல்கிறார்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர் எண்ணிக்கை உள்ளது என்பது வேதனை தரக்கூடியதாக உள்ளது.
சத்துணவு சமையல்…
இப்பள்ளியில், சத்துணவு உதவியாளராக பானுமதி என்பவர் பணியாற்றி வருகிறார். பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே பயின்றபோதும், தினமும் இவர் சத்துணவு சமைத்து மாணவருக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.