மலைத்தேனீ இனி வீட்டுத் தேனீ ஆகுமா? - மதுரை வேளாண்மை கல்லூரியில் ஆராய்ச்சி தொடக்கம்

மலைத்தேனீ இனி வீட்டுத் தேனீ ஆகுமா? - மதுரை வேளாண்மை கல்லூரியில் ஆராய்ச்சி தொடக்கம்
Updated on
2 min read

மலைப்பகுதிகளில் மட்டுமே இயற்கையாக வளரும் மலைத் தேனீக்களையும், கொம்பு தேனீக் களையும் வீடுகளிலும், விவசாய தோட்டங்களிலும் வணிக நோக்கில் வளர்ப்பதற்கான ஆராய்ச்சி, மதுரை வேளாண்மை கல்லூரியில் நடக்கிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கொடைக்கானல், நீலகிரி, திரு நெல்வேலி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட மலைப்பகுதிகள் மற்றும் ஓரளவு நடுத்தர வெப்பநிலை கொண்ட பகுதிகளில் தேனீக்கள் வளர்ப்பு அதிகமாக நடக்கிறது.

தற்போது நகர மயமாக்குதல், சாலை விரிவாக்கத்துக்காக மரங் களை வெட்டுதல், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்பாடு அதிகரிப்பு, விஞ்ஞானப் பூர்வமாக தேனை எடுக்காமல் தீயை கொண்டு தேனீக்களை அழித்து தேனை எடுப்பது, புவி வெப்பமயமாதல், காடுகள் அழிப்பு மற்றும் மழையின்மை போன்றவற்றால் தேனீக்கள் அதிகளவு அழிவதாக கூறப்படுகிறது. அயல் மகரந்த சேர்க்கையில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஆனால், தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடம் இல்லாததால், தேனீக்கள் எண் ணிக்கை குறைகிறது. இதுகுறித்து மதுரை வேளாண்மை கல்லூரி பூச்சியில்துறை உதவிபேராசிரியர் சுரேஷ் கூறியதாவது:

இந்தியாவில் மலைத்தேனீ, கொம்பு தேனீ, இந்திய தேனீ, இத்தாலிய தேனீ, கொசு தேனீ ஆகிய 5 வகை தேனீக்கள் உள்ளன. பெரும்பாலும் தற்போது தொழில்முறையாக கொசுத்தேனீ, இந்திய தேனீக்கள்தான் அதிகளவு வளர்க்கப்படுகின்றன.

இந்திய தேனீக்களில் ஆண்டுக்கு 2 கிலோ 5 கிலோ தேன் எடுக்கலாம். மலைத்தேனீ, உருவத்தில் மிகப்பெரியவை. உயர்ந்த மரக்கிளைகள், பாறை விளிம்புகள், அணைக்கட்டுகள் மற்றும் பெரிய கட்டிடங்களின் மேல் கூடு கட்டுகின்றன.

இதில் இருந்து ஒரு ஆண்டிற்கு 35 கிலோ முதல் 40 கிலோ தேன் எடுக்கலாம்.


வணிக ரீதியாக பரிசோதனை முறையில் பெட்டிகளில் வளர்க்கப்படும் இத்தாலியத் தேனீ.

இவற்றை வீடுகளில் வர்த்த முறையாக வளர்க்க முடியாது. மலைவாழ் மக்கள்தான், இந்த மலைத்தேனை எடுக்க முடியும். தற்போது மதுரை அரசு வேளாண்மை கல்லூரியில் வணிக நோக்கில் இந்தத் தேனீக்களை வளர்க்கும் ஆய்வு நடக்கிறது. அதுபோல், இதுவரை வட இந்தியாவில் மட்டுமே பிரதானமாக வணிக அளவில் வளர்க்கப்பட்ட இத்தாலி தேனீக்களையும் வளர்க்கும் ஆராய்ச்சிகளும் தொடங்கியுள்ளன.

1990-ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் ஒரு வகை வைரஸ் நோய் தாக்கத்தால் இந்திய தேனீக்கள் அதிகளவு அழிந்தன. அதனால், தேனீக்களை நம்பியிருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது இத்தாலி தேனீக்கள் வணிக அளவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டன.

இப்படியாக தேனீக்களை வளர்ப்பதால் ஏற்படும் வணிக நோக்க லாபம், விவசாயத்தில் அவற்றின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

மலைத்தேனீக்கள், இத்தாலி தேனீக்கள் வளர்ப்பு ஆராய்ச்சி வெற்றிக்கரமாக நடப் பதால் விரைவில் இவற்றை வணிகப் படுத்தும் திட்டத்தை வேளாண்மை கல்லூரி பூச்சியில்துறை தொடங்க உள்ளது. அதன்பின் விவசா யிகளையும் இந்த தேனீக்களையும் வளர்க்க ஆலோசனை, பயிற்சிகள் வழங்க உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேனீக்கள் ஆராய்ச்சி மையம் அமையுமா?

தேனீக்களால் தனித்து வாழ இயலாது. இவை ஒன்று கூடி சமுதாயமாகவே வாழுகின்றன. இவை மெழுகுகளால் ஆன கூட்டில் வசிக்கின்றன.

தேனீக்களின் எண்ணிக்கை குறைவால் ஒரு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மகசூல் இழப்பு ஏற்படுவதாகவும், தேனீக்கள் இருந்தால் தோட்டக்கலைப் பயிர்களில் 30 சதவீதம் மகசூல் அதிகரிப்பதாகவும், ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன. அதனால், தேனீக்கள் எண்ணிக்கை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்த தேனீக்கள் ஆராய்ச்சி நிலையம் மதுரை வேளாண்மை கல்லூரியில் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in