Last Updated : 19 Jul, 2017 07:56 PM

 

Published : 19 Jul 2017 07:56 PM
Last Updated : 19 Jul 2017 07:56 PM

வியக்கத்தக்க பட்டாம்பூச்சிகள் கூட்டம்கூட்டமாக .... கொண்டாட்டத்தில் சென்னை ஆர்வலர்கள்

சென்னையில் திடீரென்று பல்வேறு இனவகைப் பட்டாம்பூச்சிகளின் வருகை அதிகரித்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மஞ்சள், நீலம், பழுப்பு, சிவப்பு வண்ணங்களில் பெரிய அளவில் கூட்டமாய் பறந்துவரும் பட்டாம்பூச்சிகள் சென்னையில் காணமுடிகிறது. கடலோரப் ஈரப் பகுதியை வட்டமிடுவது, மாடிகளிலிருந்துமேற்கு நோக்கி பறப்பது, பூங்காக்களில் ஒட்டுமொத்தமாக வந்து இளைப்பாறுவது எனக் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், மழைபெய்து நின்றபிறகு இவற்றின் வருகை அமைகின்றன.

இந்த ஆண்டு ஏதோ ஒரு வித்தியாசம். இதன் எண்ணிக்கை முன்பைவிட பெருமளவு அதிகரித்துள்ளது.

"கிண்டி தேசிய பூங்காவில், ஜூலை 8 அன்று மட்டும் 8,000 மஞ்சள்நீலப் பட்டாம்பூக்களை நாங்கள் பார்த்தோம். இது தவிர கிட்டத்தட்ட 2 ஆயிரம்போல மஞ்சள்நீல மற்றும் இடம்பெயர்ந்து வந்த சாதாரண வகைப் பட்டாம்பூச்சிகளையும் காணக் கிடைத்தது.'' என்கிறார் இயற்கைக் கல்வியியலாளரும் எழுத்தாளருமான ஆர்.பானுமதி.

பானுமதி 30 ஆண்டுகளாக பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தி வருகிறார், ''1990 களின் நடுப்பகுதிக்கு பின்னர், இந்த அளவுக்கு பலவகையான பட்டாம்பூச்சிகளை கூட்டம் கூட்டமாய் ஒரே இடத்தில் நான் கண்டதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மஞ்சள்நீல பட்டாம்பூச்சிகளை ஒரே கூட்டமாய் காணும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்பாராத வகையில் நிறைய எண்ணிக்கையிலான சாதாரண வெண்ணிற பட்டாம்பூச்சிகள், இடம்பெயர்ந்து வந்தவை, மஞ்சள்நீலப் பட்டாம்பூச்சிகள் சென்னையைக் கடந்து சென்றதை காணமுடிந்தது'' என்கிறார் அவர்.

இப்படி வருபவை பட்டாம்பூச்சிகள் மட்டும் அல்ல.

பார்வையாளரும் பட்டாம்பூச்சிகள் ஆர்வலருமான எஸ்.வெங்கட்ராமன் கருத்துப்படி, குளவிகள், தேனீக்கள் மற்றும் குளவிக் கூட்டங்கள் என பொங்கிப் பெருகுகின்றன. இதில் மிகவும் கவனித்தக்கவையாக உள்ளவை பட்டாம்பூச்சிகள்தான்.

சென்னை நகரத்தைக் கடந்துசெல்லும்போது அதன் வெவ்வேறு பகுதிகளில், குறிப்பாக சென்னை, ஐஐடி வளாகப் பகுதியிலிருந்தும் சிஎஸ்ஐஆர் வளாகப் பகுதியிலிருந்தும் கிண்டி தேசிய பூங்காவை நோக்கியும் அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள தொல்காப்பிய பூங்காவுக்கும் இவை உற்சாகத்தில் படையெடுப்பு செய்வதைப் பார்க்கமுடிகிறது.

வெங்கட்ராமன் கூறும் வியக்கத்தக்க வகையில் ஒரு செய்தி, வேளச்சேரி போன்ற குடியிருப்புப் பகுதிகளிலும் பெரிய அளவில் இல்லையென்றாலும் வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கையில் பார்க்கமுடிகிறது என்று கூறியிருப்பதுதான்.

பெயின்டேடு லேடி, கிரிமிசன் ரோஸ் மற்றும் காமன் ஜெஸிபெல் போன்றவற்றைத் தவிர மற்ற வகை பட்டாம்பூச்சிகளும் அதிகம் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேற்சொன்ன மூன்றுவகை பட்டாம்பூச்சிகள் தென்படும்போது புதிதாகத் தோன்றவில்லை. மற்றவைதான் வித்தியாசமாக வியக்கவைத்துள்ளன.

''பொதுவான மஞ்சள் பட்டாம்பூச்சிகள், பெயிண்டேடு லேடி (கருப்பு, செம்மண் வண்ணம், வெண்மை கலந்திருக்கும்), காமன் எமிகிரேண்ட் (முழுவதும் பச்சை வண்ணம் கொண்டது) , காமன் ஜெசிபெல் (மஞ்சள் சிகப்பு வெண்மை வண்ணங்களில் புட்டா போட்டது), கிரைம்சன் ரோஸ் கறுப்பு வண்ண இறகுகளில் சற்றே வெள்ளைக் கோடுகளும், கொஞ்சம் சிவப்புப் புள்ளிகளும்) கடலோரப் பகுதிகளில் பறந்து சென்றதை பார்த்திருக்கிறார்கள். இந்த வகை பட்டாம்பூச்சிகள் தெற்குநோக்கிப் பறக்கின்றன. சிலவகைப் பட்டாம்பூச்சிகள் மேற்கு நோக்கியும் செல்கின்றன. வருடத்தின் இந்த பருவகாலங்களில் புலம்பெயர்வு என்பது வழக்கமானதுதான். இவை செப்டம்பர் வாக்கில் திரும்பிவரும்'' என்றார் பட்டாம்பூச்சி ஆர்வலர் மாதவ்.

எது எப்படியிருப்பினும் சென்னைக்குள் இவ்வளவு எண்ணிக்கையில் பட்டாம்பூச்சிகள் பறப்பது என்பது இதுவரை எந்த ஆவணத்திலும் இடம்பெறாத தகவலாகும்.

குறிப்பிட்ட இனவகை பட்டாம்பூச்சிகள் திடீர் என விசையுடன் வெளிப்பட்டதற்கு ''சமீபமாக மாறியுள்ள காலநிலை வேறுபாடுகள் முக்கிய காரணம்'' என்று வலியுறுத்தி கூறுகிறார், கிறித்தவ மகளிர் கல்லூரியில் தாவர உயிரியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் பாவ்லைன் டெபோரா.

இதுகுறித்து அவர் தெரிவித்தபோது, பருவம் தப்பிய மழை, ஒழுங்கற்று பூக்கும் முறைகளை உருவாக்குகின்றன. இது பட்டாம்பூச்சிகள் மற்றும் கம்பளிப்புழுக்களின் உணவு வகைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சிலவகை உயிரினங்கள் சிலவகை தாவரங்களை சார்ந்து வாழும் தன்மையும் பருவகால வேறுபாடுகளும் இந்தவகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில மலர்கள் முன்னதாகவே அக்டோபர் அல்லது நவம்பரில் பூத்துவிடுகின்றன.அதுபோலன்ற ஒரு தோராயமான மாற்றம்தான் இப்போது ஏற்பட்டிருப்பது என்றார்.

ஆர்வலர் பானுமதி இது குறித்து குறிப்பிடும்போது, "கம்பளிப்பூச்சிகள் மற்றும் லார்வா புழுக்களுக்கும் இளம் தளிர்கள் மற்றும் இலைகள் தேவைப்படுகின்றன. வார்தா புயலுக்குப் பிறகு சுற்றுச் சூழல் குலைவு ஏற்பட்டதால் சிலவேளைகளில் சில மாதங்கள் கூட புதிய தளிர்கள் எதுவும் துளிர்க்காமல் கடந்துவிட்டன.

வழக்கமாக இப்பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் அவ்வப்போது மழை பெய்வதைக் காணலாம். ஆனால் இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து குறிப்பிடத்தக்க மழை வரவில்லை. குல்மொஹர் மலர்கள் தேன்களை உருவாக்கத் தொடங்கியதால் அதை சார்ந்துள்ள பட்டாம்பூச்சிகள் அவைகளை ருசித்து புத்துயிர் பெறுகின்றன என்று விளக்கமாக தெரிவித்தார்.

கிறித்தவ மகளிர் கல்லூரி பேராசிரியர் டெபோரா கூறிய விவரம்,

'' premna மற்றும் ironwood போன்ற வெளிநாட்டு மரங்கள் பட்டாம்பூச்சிகளுக்கு முக்கியமாகும், ஆனால் சென்னை நகரின் மக்கள் அலங்கார காரணங்களுக்காக கவர்ச்சியான அவ்வகை தாவரங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர், பருவமழை தவறியதால் அந்த வெளிநாட்டுத் தாவரங்கள் பூப்பதில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்கள் உணவுபெறவும் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நீர்நிரம்பிய இடங்களை நோக்கி கூட்டம்கூட்டமாக பட்டாம்பூச்சிகள் பறந்துவருகினறன. முக்கியமாக மழைக்குப் பிறகு தேங்கிய நீர்ப்பகுதிகளை நோக்கி ஆண் பட்டாம்பூச்சிகள் பறந்து வருகின்றன. அத்தகைய ஈரநிலங்களில் இருக்கும் சில தாதுக்களையும் ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சிகின்றன.

அங்கிருந்து தேன்மட்டும் எடுக்க முடிவதில்லை. என்கிறார் பானுமதி. இந்த ஊட்டச்சத்துக்கள் உற்சாகம்பெற உதவுகின்றன. இக்காலத்தில்தான் பட்டாம்பூச்சிகளும் இனப்பெருக்கத்தில் கவனம் செலுத்த முடியும், எப்படியெனில் இந்த மழைக்காலம், நிறைய தேன் கிடைக்கவும், பட்டாம்பூச்சிகளுக்கு உயிர் வாழத் தேவையான இளந்தளிர்களுக்கும் புதிய இலைகளுக்கும் உத்தரவாதம் தருகிறது.

ஒரு கட்டத்தில் இந்த பட்டாம்பூச்சிகள், கம்பளிப்பூச்சிகள், புழுக்கள் கூட உயிர்வாழ எதுவுமின்றி கிடக்கின்றன. சிலவாரங்கள் அப்படி அவற்றால் செயலற்ற நிலையில் காலந்தள்ளுகின்றன. ஆனால் தற்போது மழையினால் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன. அதனால் வாழ்க்கைச் சுழற்சியின் தேவையினால் சென்னை நகரத்தைக் கடந்து அவைகள் வண்ணமயமாக பறந்துசெல்கின்றன.'' என்றார் டெபோரா.

பசியால் வாடிய பட்டாம்பூச்சிகள் மழைக்கு உற்சாகம் பெற்றுள்ளன என்ற டேபோராவின் செய்தி சற்றே நெகிழ வைத்தது.

மகரந்தங்களில் தேன் பெருக மலர்கள் பூத்துக் குலுங்க வேண்டும். மழை பெய்யும் சூழலுக்கு மரங்களையும் பெருக்க வேண்டும். இயற்கை மனிதனோடு நிச்சயம் கைகுலுக்கும், சென்னை போன்ற பெருநகரங்களில் பட்டாம்பூச்சிகளுக்கும் கொஞ்சம் இடம் இருக்குமானால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x