

புதுச்சேரியில் தேர்வாகியிருக்கும் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று திடீரென ராஜ்நிவாஸில் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து பரபரப்பான சூழலில் நேற்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதனால் புதுச்சேரி அரசியலில் குழப்பமும், திடீர் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அரசு பொறுப் பேற்று ஓராண்டாகியும் நியமன எம்எல்ஏக்களை நியமிக்கவில்லை. இந்நிலையில், ஆளுநர் கிரண் பேடி தாமாகவே 3 பேரை எம்எல்ஏக்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார். அப்பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர் பாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற் கிடையே நேற்று ஆளுநர் கிரண் பேடியை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும் சந்தித்து, மத்திய அரசு அனுப்பிய கடிதத்தைப் பெற்றனர்.
அதில், மத்திய உள்துறை கடந்த மாதம் 23-ம் தேதியே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து புதுச்சேரி தலைமைச் செயலர் மனோஜ் பரிதாவை சந்தித்து, அவரிடமிருந்து மத்திய அரசு அனுப்பிய உத்தரவு நகலையும் பதவியேற்புக்கான கடிதத்தையும் பெற்றனர். பின்னர், சபாநாயகர் வைத்திலிங்கத்தை சட்டப்பேரவையில் சந்தித்து அக்கடிதத்தை வழங்கினர்.
ரகசியமாக நடந்த பதவியேற்பு
இந்த சூழலில், நேற்றிரவு, நியமன எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாஸில் பதவிப் பிரமாணம் செய்து வைத் தார். இந்த நிகழ்ச்சியில் செய்தி யாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப் படவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயபால், அசோக் ஆனந்த், அக்கட்சி பொதுச் செயலாளர் பாலன் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். அவர்களோடு உள்ளே சென்ற செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அவசர ஆலோசனை
இதற்கிடையே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸார், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு நமச்சிவாயம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘‘பல்வேறு அமைப்புகள் வரும் 8-ம் தேதி இணைந்து நடத்தும் பந்த் போராட் டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். அனைத்து கட்சிகளை யும் திரட்டி டெல்லியில் நாடாளு மன்றம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.
முன்னதாக, புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. இதில், வரும் 8-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப் பட்டது.
ராஜ்நிவாஸில் பதவியேற்கலாம்
நியமன எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல், அதை ஆளுநரே மேற்கொள்ளலாமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. ஏற்கெனவே அவ்வாறு நடந்துள்ளதற்கான முன்னுதாரணம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 1990-ம் ஆண்டு எம்.டி. ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது நியமன எம்எல்ஏக்கள் மூவரை, அப்போது ஆளுநராக இருந்த சந்திராவதி ராஜ்நிவாஸில் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்றும் குறிப்பிடுகின்றனர்.