பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்?- தமிழக அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காதது ஏன்?- தமிழக அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்
Updated on
1 min read

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்காதது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகம் முழுவதும் கடந்த 2012-ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது 15,169 பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு 65 சதவிதமும், மாநில அரசு 35 சதவிகிதமும் ஊதியம் வழங்கவேண்டும்.

2012-ல் 5,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு உயர்த்தப்பட்ட ஊதிய உயர்வை வழங்கப்படவில்லை. நவம்பர் 18, 2014ஆம் ஆண்டு 2,000 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டது என அரசாணை வெளியிடப்பட்டது. 2015 - 2016 கல்வி ஆண்டில் 7,700 ரூபாய் மற்றும் 2016 - 2017 ஆண்டில் 15,000 என மொத்தம் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் 22,700 ரூபாய் நிலுவைத்தொகை மட்டும் தரவேண்டியுள்ளது.

ஊக்க ஊதியமாக மத்திய அரசு 10 சதவிகிதம் நிதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக வழங்காமல் ஏமாற்றியதாக குற்றம் எழுந்துள்ளது. இதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக அரசு முறையாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி இருந்தால், இந்த கல்வியாண்டில் 9,200 ரூபாய் ஊதியமாக பெற்றிருப்பார்கள். சரியான நேரத்தில் ஊதிய உயர்வை வழங்காத காரணத்தால் பல குடும்பங்கள் கஷ்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழக அரசை கண்டித்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்கள். இதற்கு செவிசாய்க்காத தமிழக அரசை கண்டிக்கிறோம்.

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்று உடனே தமிழக அரசு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கின்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்காமல் இருந்ததை பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிய பிறகு, 40 சதவிகிதம் மட்டும் வழங்கி, மீதமுள்ள 60 சதவிகிதத்தை வழங்காமல், மற்ற துறைகளுக்கு பயன்படுத்தி லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் வழிவகை செய்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மீதமுள்ள 60 சதவிகிதம் சலுகைத் தொகையை மாணவர்களுக்கு இந்த அரசு உடனடியாக வழங்கிடவேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் வெறும் அறிவிப்பு அரசாக இருந்தது, அதேபோல் எடப்பாடி பழனிசாமி அரசு முந்தைய அரசுபோல் வெறும் அறிவிப்பு ஆட்சியாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதியை முறையாக அந்தந்த துறைகளுக்கு உடனடியாக ஒதுக்கிட வேண்டும்'' என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in