Published : 10 Nov 2014 08:56 AM
Last Updated : 10 Nov 2014 08:56 AM

பயிர்களை அழித்து நீர்த்தேக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதா?- விவசாயிகள் சாலை மறியல்; தீக்குளிக்க முயற்சி

கும்மிடிப்பூண்டி அருகே நீர்த்தேக்கம் கட்ட பயிர்களை அழித்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல் மற்றும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கண்ணன்கோட்டை, தேர் வாய் ஏரிகளை இணைத்து, 330 கோடி ரூபாய் செலவில் நீர்த் தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த நீர்த் தேக்கத் திட்டத்தின் மூலம், கண்ட லேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீரை தேக்கி வைத்து, சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கலாம்.

கண்ணன் கோட்டை, தேர்வாய், கரடிப்புத்தூர் பகுதிகளில் 1252.47 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த நீர்த்தேக்கத்துக்காக விவசாயிகளின் பட்டா நிலம் கையகப்படுத்த முடிவு செய்தது. அதன்படி, அரசு மற்றும் வனத்துறை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நீர்த்தேக்கத் துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட 692.42 ஏக்கர் விவசாய பட்டா நிலத்தின் உரிமையாளர்களான ஐந்நூறுக் கும் மேற்பட்டவர்களில், 46 பேர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக , சென்னை உயர்நீதி மtன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தனர். அந்த மனு கடந்த வியாழக்கிழமை தள்ளுபடி யானது. இதற்கிடையே வழக்கு தொடர்ந்தவர்களும், கையகப் படுத்த நிலத்துக்கு இழப்பீடு பெற்றவர்களும், தங்கள் நிலத்தில் பயிர் சாகுபடி செய்தனர்.

இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக் கிழமை, விவசாய நிலங்களை கையகப்படுத்த பொக்லைன் சகிதம் கண்ணன்கோட்டை பகுதிக்கு வந்தனர். நிலத்தில் பயிர் சாகுபடி செய்துள்ளதால், அறு வடை முடிந்து, நிலத்தை கையகப் படுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, அன்று தற்காலிகமாக நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

இச்சூழலில், நேற்று முன் தினம் போலீஸ் பாதுகாப்புடன், பொதுப்பணித் துறை அதிகாரி கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நிலத்தை கையகப் படுத்த கண்ணன்கோட்டைக்கு வந்தனர். அப்போது, பொக்லைன் மூலம், பயிர்களை அழித்து, நிலத்தை சமன்படுத்த முயற்சித்தனர். அதற்கு பொதுமக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, தன் துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்ற விவசாயியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். இதனால், நேற்று முன் தினமும் நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக மாக நிறுத்தப்பட்டது.

இச்சூழலில், நேற்று விடுமுறை என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை கண் ணன்கோட்டை பகுதியில், பயிர் களை அழித்து நிலம் கையகப் படுத்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக திரண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு விவசாயிகள் தங்கள் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி , தீக்குளிக்க முயன்றனர். இதனை, மற்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

பிறகு, கண்ணன்கோட்டை- பாலவாக்கம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பயிர் செய்யப்பட்ட நிலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் இறங்கியதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x