Published : 08 Jul 2017 12:54 PM
Last Updated : 08 Jul 2017 12:54 PM

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சித் தகுதியை சூறையாடும் போக்கை கைவிடுக: ஸ்டாலின்

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சித் தகுதியை சூறையாடும் போக்கை மத்திய பாஜக அரசும் அதிமுக அரசும் நிறுத்த வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை சென்னையிலிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாற்றும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழின் தொன்மையையும், தனித்தன்மையையும் பாராட்டி, அங்கீகாரம் அளித்திடும் வகையில், நீண்ட காலமாக தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கோரி தமிழறிஞர்களும், மொழிப்பற்றாளர்களும் போராடி வந்திருக்கிறார்கள்.

முதன்முதலில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரியவர் சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதிமாற் கலைஞர். "தமிழ் செம்மொழி என்பது திண்ணம். இது பற்றி தொன்று தொட்டுத் தமிழ்மொழி செந்தமிழ் என நல்லிசைப் புலவரால் நவின்றோதப் பெறுவதாயிற்று. ஆகவே தென்னாட்டின்கட் சிறந் தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர் தனிச் செம்மொழியேயாம் என்பது நிச்சயம்" என்று தமிழ் மொழியின் வரலாறு என்ற தமது நூலில், 100 ஆண்டுகளுக்கு முன்பே அறுதியிட்டு உறுதியாகச் சொன்னவர் பரிதிமாற் கலைஞர்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற உயர் பெரும் நூலில் வெளிநாட்டு அறிஞர் கால்டுவெல், 'திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்' என்று படைத்துக் காட்டிய இவர், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கோரிய இரண்டாவது அறிஞர் ஆவார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, 'தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் அளிக்க வேண்டும்' என்று அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக, சோனியா காந்தி வழிகாட்டுதலில் அமைந்ததும், திமுக பங்கேற்றதுமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமையிலான மத்திய அரசு, 12.10.2004 அன்று தமிழ் மொழிக்குச் செம்மொழி என்ற அந்தஸ்தை வழங்கி, அறிவிப்பு வெளியிட்டது.

நீண்ட நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பு தமிழ் அறிஞர்களின் நெஞ்சங்களை எல்லாம் குளிர வைத்தது. தமிழக மக்களின் உள்ளுணர்வைத் துள்ளிக் குதித்துக் கொண்டாட வைத்தது. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்தாலும், தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மறைந்த அர்ஜூன் சிங்கிடம் வலியுறுத்தி, அந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, தனித்தன்மையுடன் இயங்கிட வேண்டும் எனும் நோக்கில், தமிழகத்திற்குக் கொண்டு வந்தார் தலைவர் கருணாநிதி.

அந்நிறுவனம் 18.8.2007 அன்று துவங்கி வைக்கப்பட்டது. சென்னை, காமராசர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறையின் பாலாறு இல்லத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத் திறப்பு விழா 30.6.2008 அன்று நிதியமைச்சராக இருந்த க.அன்பழகன் தலைமையில் நடைபெற்று, அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய தலைவர் கருணாநிதி, 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தமிழகத்தில் காலூன்றுகின்ற இந்த நாள், பரிதிமாற்கலைஞர் 150 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட கனவு. அந்தக் கனவு நனவாக வேண்டுமென்று 50 ஆண்டுகளுக்கு முன்பே நான் கொண்ட நினைவு இன்று செயலாக்கம் பெறுகின்றது' என்று பெருமிதத்துடன் சுட்டிக்காட்டியதை இந்த நேரத்தில் மகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்.

இத்தனை சீரும் சிறப்புமிக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு சென்னை அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தந்து அந்த நிலத்தை சீரமைக்க 145.65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளும் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன.

தலைவர் கருணாநிதி தன் சொந்தப் பணத்தில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இந்தத் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஒன்றை நிறுவினார். மணிப்பூரி, நேபாளி போன்ற மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டதுடன், பல்வேறு தமிழ் இலக்கியங்கள், தமிழாராய்ச்சிப் பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன.

சிந்துவெளி எழுத்துச் சிக்கலுக்கு, திராவிடத் தீர்வை அளித்து செம்மொழிக்கு பங்களித்த பின்லாந்து பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு, கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது வழங்கி கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிறப்பு செய்யப்பட்டார். மேலும், அந்த அறக்கட்டளையின் சார்பில் சிறந்த தமிழறிஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு 2005-06, 2006-07, 2007-08 ஆகிய ஆண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் விருதுகளுக்கான பொற்கிழிகள் வழங்கப்பட்டன.

முதன்முதலில் தமிழ் செம்மொழி விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் 6.5.2011 அன்று வழங்கப்பட்டபோது, புலவர்களின் செந்நாவில் புரண்டு, புயலாகவும், பூந்தென்றலாகவும், புறப்பட்ட தமிழ் மூவேந்தர்களாம் சேர – சோழ - பாண்டியர்களின் அரண்மனையில் எதிரொலித்த இனிய தமிழ் - சங்கம் வளர்த்துச் சங்கநாதம் செய்த தமிழ் - வேங்கடம் முதல் குமரி வரை விதைகளைத் தூவி, வியப்புறு தருக்களை வளர்த்த தமிழ் - மலை தாண்டி, கடல் தாண்டி, மண்ணுலகின் முதன்மை மொழி என வலம்வந்த தமிழ் - மாளிகைகளில் மட்டுமே மணம் வீசிக்கொண்டிருந்த நிலையினை மாற்றி, அறிஞர் அண்ணாவால், மண் குடிசைகளுக்கெல்லாம் கொண்டு செல்லப்பட்டு, குன்றிலிட்ட விளக்காய் வெளிச்சக் கதிர் பரப்பிய தமிழ் - எழுத்து, சொல், பொருள் மூன்றிலும், மற்றெம்மொழியையும் விஞ்சி நிற்கும் தமிழ் - இன்றைக்கு டெல்லி மாநகரில், 'ராஷ்டிரபதி பவன்' எனப்படும் ஜனாதிபதி மாளிகைக்குள், 'ராஜ உபசாரத்தோடு' கம்பீரமாய் நுழைகிறது என்றவர் தலைவர் கருணாநிதி.

தமிழாராய்ச்சிப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முடக்கப்பட்டது. அதிமுக அரசுக்கு செம்மொழி என்ற வார்த்தையே விழுங்க முடியாத வேப்பங்காயாகக் கசந்ததை அறிய முடிந்தது. அதனால் இந்தத் தமிழ்ப் பெருமை போற்றும் நிறுவனத்திற்கு முழு நேர இயக்குனர் கூட நியமிக்காமல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தடுத்த அதிமுக அரசு, கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழறிஞர்களுக்கான விருதுகளையும் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில் மைசூரில் இருந்து போராடிப் பெற்று வந்த செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை, குறிப்பாக, தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையாக மாற்றுவதை, எக்காரணம் கொண்டும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. மத்திய அரசின் இம்முயற்சியை தமிழ்கூறும் நல்லுலகம் நிச்சயம் மன்னிக்காது.

தமிழ் மொழியை தேசிய மொழியாக்க, மத்திய ஆட்சி மொழியாக்க, சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க எவ்வித முயற்சியும் எடுக்காத மத்திய பாஜக அரசு, இந்தியாவின் பல தேசிய இனமொழிகளைப் பின்னுக்குத் தள்ளி, சமஸ்கிருதத்தையும் - இந்தியையும் மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டு, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து, தமிழுக்கு இருக்கும் தன்னாட்சி அந்தஸ்தை சீர்குலைக்க முயற்சி செய்வது, தமிழக மக்களின் தூய உணர்வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, தமிழறிஞர்களின் நெஞ்சத்தில் ஈட்டி கொண்டு கீறும் செயலுமாகும்.

இந்தித் திணிப்பில் அடங்காத ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசு, செம்மொழியாம் அன்னைத் தமிழ் மொழிக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களிலும் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன். தமிழைக் குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டும் தரக்குறைவான காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, தமிழ் மொழி மீது மத்தியில் உள்ள பாஜக அரசுக்கு இருக்கும் தீராத காழ்ப்புணர்ச்சியையும் பாகுபடுத்தும் துவேஷ மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.

ஆகவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழத்திற்கு மாற்றும் முயற்சியை மத்தியில் உள்ள பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்தியில் உள்ள பாஜக அரசும், அதற்கு மறைமுகமாக திரைமறைவில் உதவும் அதிமுக அரசும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சித் தகுதியை சூறையாடும் போக்கில் செயல்படுவதை நிறுத்திக் கொண்டு, இந்நிறுவனம் முழுநேர இயக்குநர் மற்றும் முழு நிதியுதவியுடன், தமிழாராய்ச்சிப் பணிகளில் தன்னாட்சி அதிகாரத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிளர்ச்சி வழியைத் திறந்துவிட்டுத் தூண்ட வேண்டாம்'' என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x