

பைக் ரேஸில் ஈடுபட்ட கல்லூரி மாணவர், கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் சிக்கி பலியானார்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சீனிவாச ராவ்(48). இவரது மகன் நவீன் என்ற நவதேஜா(21). காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார். இவரது நண்பர் விக்னேஷ்(22). நேற்று முன்தினம் இரவு நவீன், விக்னேஷ் மற்றும் இவர்களின் நண்பர்கள் உட்பட மொத்தம் 6 பேர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதற்காக 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் சென்றனர். கோடம்பாக்கத்தில் இருந்து வடபழனி வரை சென்றுவிட்டு மீண்டும் கோடம்பாக்கத்துக்கு வருவதே இவர்களின் பந்தய இலக்காக இருந்தது.
இதில் ஒரு மோட்டார் சைக்கிளை நவீன் ஓட்ட, பின்னால் விக்னேஷ் அமர்ந்து கொண்டார். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் வடபழனி நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தை நவீன் முந்திச் செல்ல முயன்றார். அப்போது, எதிரே ஒரு கார் வரவே, நவீன் உடனே பிரேக் போட்டார். ஆனால் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், காரில் மோதி, சாலையில் கவிழ்ந்து, சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நவீன், சம்பவ இடத்திலேயே பலியானார். விக்னேஷ் படுகாயம் அடைந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து பிரிவு போலீஸார், நவீனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பைக் ரேஸ்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், அவற்றையும் மீறி பந்தயங்களும் விபத்துகளும் நடந்து வருகின்றன. இந்த விபத்தால் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.