

ஜிஎஸ்டி வரிக்கு பயந்து 14 ஆயிரம் வணிகப் பெயர்கள், வணிக முத்திரைகளை திரும்ப ஒப்படைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரையில் மடீட்சியா சார்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பல பொருட்களுக்கு என்ன வரி எனத் தெரியாமல் வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கு விடை கிடைக்கும் என நினைத்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கருத்தரங்கிற்கு வந்திருந்தனர்.
இதில் வியாபாரிகள் சங்கத்தி னர் பலர் பேசுகையில் ஜிஎஸ்டி யால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்பு களை பட்டியலிட்டனர். அவர்கள் பேசியதாவது:
பாரம்பரிய உணவுகளான இடியாப்பம், புட்டு, கடலை மிட்டாய், சீனி மிட்டாய், ஊறுகாய் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். இயந்திரங்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஊறுகாய்களுக்கு 50 கிராம் வரை 5 சதவீதமும், அதற்கு மேல் 18 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு தொழில் அழிந்துபோகும்.
முழு இயந்திரம், பகுதி இயந்திரம், வீடுகளில் தீப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. இம்மூன்று பிரிவிலும் தீப்பெட்டிக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. விபூதி, குங்குமம், பத்திக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 99 சதவீதம் இந்துக்கள் மட்டுமே பயன்படுத்தும் கற்பூரத்துக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
சாம்பிராணிக்கு என்ன வரி என்றே தெரியவில்லை. வணிக பெயர்கள், வணிக சின்னங்களுடன் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் வரி செலுத்துவதற்கு பயந்து இதுவரை 14 ஆயிரம் பேர் தங்கள் வணிகப் பெயரை (பிரான்ட் நேம்), வணிக முத்திரையை (டிரேட் மார்க்) திரும்ப ஒப்படைத்துள்ளனர் என்றனர்.
இட்லி மாவு வியாபாரி பரமானந்தம் என்பவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த இட்லி மாவு பாக்கெட்டை அமைச்சரிடம் காண்பித்து, குடிசைத் தொழிலாக நடைபெறும் இட்லி மாவு தயாரிப்புக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு மத்திய சுங்கம், சேவை மற்றும் கலால் ஆணையர் ஆர்.சரவணகுமார் அளித்த பதில் குழப்பமாக இருந்ததால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு பதில் அளிக்கையில், இட்லி மாவு ஒரு நாளில் கெட்டுப்போய்விடும். காய்கறி, பழங்கள் போல் அழுகும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இட்லி மாவுக்கும் வரி விலக்கு இருக்கும். இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து தெரியப்படுத்துவார்கள் என்றார்.
அமைச்சர் தொடர்ந்து பேசியதாவது:
கடலை மிட்டாய்க்கு கூடுதல் வரி, பீட்சாவுக்கு குறைந்த வரியா? எனக் கேட்கின்றனர். கடலை மிட்டாய் பல நாட்கள் கெடாமல் இருக்கும். இதனால் அதற்கு 12 சதவீத வரி. கடையில் சாப்பிடும் பீட்சாவுக்கும் 12 சதவீத வரி தான். பீட்சாவுக்காக பயன்படுத்தும் கச்சா பிரட்டுக்கு தான் 5 சதவீத வரி. அந்த கச்சா பிரட் வாங்கி வீட்டிற்கு கொண்டுச் சென்று பீட்சா தயாரித்து சாப்பிட வேண்டும். முழு பீட்சா எப்படி இருக்கும், கச்சா பிரட்டை வாங்கிச் சென்று பீட்சா தயாரிக்க என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றார்.
மத்திய சுங்கம், சேவை மற்றும் கலால் வரி துறை ஆணையர் ஆர்.சரவணகுமார் கூறுகையில், கடலை மிட்டாய்க்கு 5 சதவீத வரி தான் விதிக்கப்பட்டுள்ளது என்றார். ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்கவில்லை. அதில் அதிருப்தி அடைந்த அமைச்சர் பலமுறை குறுக்கிட்டார். சரவணகுமார் கூறும்போது, மனு அளித்தால் எங்கள் கருத்தையும் பதிவு செய்து ஜிஎஸ்டி வாரியத்துக்கு அனுப்புவோம். கொள்கை முடிவு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.
இதனால் தெளிவு கிடைக்கும் என நினைத்து கருத்தரங்கிற்கு வந்திருந்த வியாபாரிகள் குழப்பத்திலேயே சென்றனர். கருத்தரங்கில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் சசிராமன், ஆடிட்டர் சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை
கருத்தரங்கில் பாஜக மாநில செயலர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:
தஞ்சாவூரைவிட மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் பிறந்தவர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென் மாவட்டங்களை சேர்ந்த 3 கோடி பேர் பயனடைவர்கள். தொழில் தேக்க நிலையால் தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்வது அதிகமாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.