

அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக பதியப்பட்ட இரண்டாவது வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக பெங்களூரு சிறையில் இருந்து காணொலிகாட்சி மூலம் சசிகலா நேற்று ஆஜரானார். அவரிடம் ஜூலை 13-ம் தேதி குறுக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அறிவித்தார்.
கடந்த 1996-97ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெஜெ டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து ஒளிபரப்பு சாதனங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி மீது 4 வழக்குகளை அமலாக்கத் துறையினர் பதிவு செய்தனர். சசிகலா மீது மட்டும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சசிகலா மீதான முதல் வழக்கில் ஏற்கெனவே கடந்த ஜூன் 21-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக பெங்களூரு சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அவர் ஆஜரானார்.
இந்நிலையில் 2-வது வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் இருந்து மீண்டும் காணொலி காட்சி மூலம் சசிகலா நேற்று ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஜாகிர் ஹூசைன், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினார். அவரிடம் காலை 11.15 முதல் மதியம் 12.45 வரை விசாரணை நடத்தப்பட்டது.
பல கேள்விகளுக்கு ‘தெரியாது’, ‘ஞாபகமில்லை’, ‘இல்லை’ என சசிகலா பதிலளித்தார். அவரது பதிலை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்றைய தினம் சசிகலாவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார்.