

மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 25-ம் தேதி தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிவித்துள்ளார்.
‘இந்தியாவை மீட்போம். தமிழகத்தை காப்போம்’ என்ற முழக்கத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதன் நிறைவு பொதுக்கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா ளர் எஸ்.சுதாகர் ரெட்டி பேசும் போது, “தமிழகம், கேரளாவில் பருவமழை பொய்த்துவிட்டதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகத்துக்கே உணவு அளிக்கும் விவசாயிகளுக்கு போதிய வரு மானம் இல்லை. இதனால், அவர் கள் கடனில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் அதிமுக பல பிரிவுகளாக உள்ளது. இதை பயன்படுத்தி பாஜக, அதிமுகவை மறைமுகமாக மிரட்டுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலத்தவரும் இந்தியில்தான் பேச வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றார்.
கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசும்போது, “நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். விவசாய கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கால்நடைகளை இறைச்சிக்காக விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். கீழடி அகழாய்வை தொடர வேண்டும். தமிழகத்தில் லோக் ஆயுக்தா, மத்தியில் லோக்பால் சட்டமும் கொண்டு வர வேண்டும். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இதில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், சுப்பராயன், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.
இதில், தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.