Published : 15 Jul 2017 08:40 AM
Last Updated : 15 Jul 2017 08:40 AM

கிண்டி ஆளுநர் மாளிகையில் அவ்வையார் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்

கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவ்வையாரின் முழுஉருவ வெண்கல சிலையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் திறந்துவைத்தார்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிண்டி ஆளுநர் மாளிகை (ராஜ்பவன்) வளாகத்தில் அண்மையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்மொழிக்கு அவ்வையார் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆளுநர் மாளிகையின் 2-வது நுழைவாயில் அருகே அவருடைய முழுஉருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலையை ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று மாலை திறந்துவைத்தார். ஆத்திச்சூடி சங்கப்பலகையை முதல்வர் கே.பழனிசாமியும், ஆத்திச்சூடியை குழந்தைகளுக்கு நவீன முறையில் கற்றுக்கொடுக்கும் தொழில்நுட்ப வசதியை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் தொடங்கிவைத்தனர். அவ்வையார் சிலையை வடிவமைத்த கிஷோர் நாகப்பா. குழந்தைகளுக்கு நவீன முறையில் ஆத்திச்சூடியை கற்றுக்கொடுக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினரை ஆளுநர் கவுரவித்தார்.

நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆளுநரின் செயலர் ரமேஷ்சந்த் மீனா வரவேற்றார். நிறைவாக, துணைச்செயலாளர் எம்.முரளிதரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x