

அதிமுக ஆட்சியை அகற்ற இளைஞர்கள் தயாராக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரவாயல் வடக்கு பகுதி திமுக சார்பில், திமுக தலைவர் மு.கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா, 94-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முகப்பேர் மேற்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் 1957-லிருந்து சட்டப் பேரவை தேர்தலில் தொடர்ச்சி யாக வெற்றிபெற்று, கருணா நிதியை தவிர வேறு யாரும் சட்டப்பேரவையில் பணியாற்றி யதில்லை. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி, ஒரு ஆட்சியாக அல்ல, காட்சியாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறது. திமுக ஆட்சி யில் இருந்தாலும், இல்லாவிட் டாலும், மக்களின் நலன் காக்கும் கட்சியாக இருந்து வருகிறது.
நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திமுகவின் செயல் பாடு சிறப்பாக உள்ளதாக அனைத்து தரப்பினரும் தெரிவிக்கின்றனர். சட்டப்பேரவையில் பேச திமுகவுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. கிடைக்கும்போதெல்லாம், கதிராமங்கலம் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு ஆகியவை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம்.
2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை விட 1.1 சதவீதம் அதிக ஓட்டு பெற்றுத்தான் அதிமுக அரசு பொறுப்பேற்றது. இப்போது உள்ள ஆட்சி, குதிரை பேரத்தால் அமைந்த ஆட்சியாக உள்ளது. மொத்தத்தில் வாக்குக்கு பணம் கொடுக்கும் ஆட்சியாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பணம் கொடுக்கும் ஆட்சியாகவும், புற்றுநோய் ஏற்படுத்தும் குட்கா விற்பனைக்காக பணம் வாங்கும் ஆட்சியாகவும், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கும் ஆட்சியாகவும், சிறையிலும் லஞ்சம் கொடுக்கும் ஆட்சியுமாக உள்ளது.
இந்த ஆட்சியை அகற்ற கட்சி இளைஞர்கள் தயாராக வேண்டும். மோசமான இந்த ஆட்சி குறித்து வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.