

டெல்லி காசியாப்பூரில் மெட்ரோ கட்டுமானப் பணியாளராக வேலை செய்யும் 22 வயது இளைஞர் ஒருவரை கால்நடைகளைத் திருடியதாகக் கூறி கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் இப்திகார் ஆலம் நேற்றுதான் (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறையில் புகார் அளித்தார். சட்டப்பிரிவுகள் 323, 341, 34 ஆகியனவற்றில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
சம்பவம் நடந்த தினமே தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் காவல்துறையைத் தொடர்புகொண்டு கால்நடை திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை பிடித்துவைத்திருப்பதாக போலீஸுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், டீசல் திருடியதாக அந்த நபர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், இப்திகார் ஆலம் கால்நடைகளையும் திருடவில்லை டீசலும் திருடவில்லை என காவல்துறை தரப்பு தெரிவிக்கின்றது.
திடீரென தன்னை சூழ்ந்துகொண்டு தாக்கிய கும்பல் தன்னை பாகிஸ்தானி என அழைத்து கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியதாகக் கூறியுள்ளார்.