

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத் துக்கு எதிராக, சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததால் சிறையில் அடைக்கப்பட்ட கல்லூரி மாணவி வளர்மதி, உண்ணாவிரதம் இருந்தார்.
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே வளர்மதி (23), ஜெயந்தி (48) என்ற 2 பெண்கள் இயற்கை பாதுகாப்பு குழு பெயரில் மீத் தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோ கித்ததாக கன்னங்குறிச்சி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களை சேலம் ஜேஎம் - 4 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசா ரணை செய்த நீதிபதி, ஜெயந்தி மீது வேறு எந்த வழக்கும் இல்லாததால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தார். வளர்மதி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 6 வழக்குகள் உள்ளதால் அவரை சேலம் பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட வளர்மதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், சட்டத்துக்கு புறம்பாக தம்மை கைது செய்ததாக கூறியும் நேற்று உண்ணாவிரதம் இருந்தார். சிறையில் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து மதியம் வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். பின், சிறைத்துறை அதிகாரிகள் வளர்மதியை சமாதானப்படுத்தியதை அடுத்து, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.