

நடப்பாண்டில் மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீஷியன் உட்பட பல்வேறு பணிகளில் 4,717 பேர் நியமிக்கப்படுவர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சுகா தாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த போது 108 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
திருநெல்வேலி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 எம்பிபிஎஸ் இடங்கள் கூடுத லாக ஏற்படுத்தப்படும். 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள், 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.20 கோடியில் முன்னோடித் திட்டமாக புதிதாக மூப்பியல் பிரிவுகள் தொடங்கப்படும்.
இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சியாக தமிழகத்தில் 11 மாவட்ட, வட்ட மருத்துவமனை களில் ரூ.8 கோடியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்கப்படும். தேனி, திருவண்ணாமலையில் ரூ.7 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துடன்கூடிய ஆயுஷ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
மனநல சிகிச்சைப் பிரிவு
தடுப்பூசி மருந்து சேமித்து வைக்க ரூ.6 கோடியே 90 லட்சத் தில் 23 சேமிப்புக் கிடங்குகள் கட் டப்படும். அனைத்து மாவட்டங் களிலும் ரூ.5 கோடியில் தலா ஒரு வட்டார நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் ஏற்படுத் தப்படும். வேலூர், திருப்பூர், தேனி, விழுப்புரம், திருவண்ணாமலையில் மனநல சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்படும். பத்மநாபபுரம், பட்டுக்கோட்டை, பெரியகுளம், திருமங்கலம் மருத்துவமனைகளில் இளம் சிசு பராமரிப்பு மையங்கள் ரூ.2 கோடியில் ஏற்படுத்தப்படும்.
சென்னை, கோவை, மதுரை உட்பட 6 அரசு மருத்துவமனைகளில் முன்னோடி திட்டமாக கட்டண மில்லா கருத்தரிப்பு சிகிச்சை மையங் கள், வீடியோ லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மையங்கள் அமைக்கப் படும். 10 அரசு மருத்துவமனைகளில் ரூ.1.50 கோடியில் புற்றுநோயாளி களுக்கான வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். 39 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.1 கோடியில் பல் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்படும். 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் வழங்கப்படும்.
தாய்ப்பால் வங்கி
வேலூர், திருநெல்வேலி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 5 தாய்ப்பால் வங்கிகள் ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சிபோல தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள் ளும் வசதி ஏற்படுத்தப்படும்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு, சிறப்பு தடுப்பூசி பிரிவுகளில் வாரத்தில் 7 நாட்களும் தடுப்பூசி போடும் வசதி அறிமுகப்படுத்தப்படும். 11 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படும். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையை மின்னணு முறையில் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.
நடப்பாண்டில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,224 எம்பிபிஎஸ் மருத்துவர்கள், 600 சிறப்பு உதவி மருத்துவர்கள், 1,010 செவிலியர்கள், 1,234 லேப் டெக்னீஷியன் உட்பட 4,717 பணியிடங்கள் நிரப்பப்படும்.
அம்மா வானொலி
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்ந்த அனைத்துக் கல்லூரிகளிலும் ரூ.26 கோடியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கு பொது சுகாதாரம் குறித்த பரந்த அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத் தவும், அவசர காலங்களில் முன் னெச்சரிக்கை தகவல்களை பரப்பவும் ‘அம்மா நலவாழ்வு வானொலி சேவை’ தொடங் கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்தார்.