Published : 09 Jul 2017 10:12 AM
Last Updated : 09 Jul 2017 10:12 AM

கோவையில் மக்கள் நீதிமன்றத்தில் 1,383 வழக்குகளுக்கு தீர்வு

கோவையில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், 1,383 வழக்குகளுக்கு ரூ.16.12 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் தலைமை வகித்தார். செயலாளரும், முதுநிலை சார்பு நீதிபதியுமான பா.சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில், போக்குவரத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள் என மொத்தம் 8,914 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் எஸ்.ஏ.ராமுலு, ஏ.நூர்அகமது, ஆர்.பிரேம்குமார், வி.ராமசாமி மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர், வழக்குகள் மீது விசாரணை நடத்தினர். இதில், 1,383 வழக்குகளுக்கு ரூ.16.12 கோடி மதிப்பில் தீர்வுகாணப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) முகாமில், 219 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

பொள்ளாச்சி வட்ட சட்டப் பணிக் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி எம். பாலகுமாரன் தலைமையில் விசாரணை நடந்தது. மாவட்ட உரிமையியல் நீதிபதி திருமணி முன்னிலை வகித்தார். மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பச்சியப்பன் மற்றும் பி.ரேவதி, அரசு வழக்கறிஞர் சம்பத்குமார் மற்றும் அமர்வு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அசல் மற்றும் பண பரிவர்த்தனை வழக்குகள் 484 எடுத்துக்கொள்ளப் பட்டு, 11 வழக்குகளுக்கு, ரூ. 20 லட் சத்து 18 ஆயிரத்து 547 வழங்க தீர்வு காணப்பட்டது. வாரிசு உரிமை வழக்குகள் 235 எடுத்துக்கொள்ளப் பட்டு அதில் 11 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. நீதிமன்றத்தில் தொடரப்படாத வங்கி வழக்குகள் உட்பட 1049 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், 45 வழக்குகள், 34 லட்சத்து 58 ஆயிரத்து 332 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன வழக்குகள் 167 எடுத்துக்கொள்ளப்பட்டு 20 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ஒரு கோடியே 47 ஆயிரத்து 500 ரூபாய்க்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

நிறைவேற்று மனு தொடர்பான 44 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 5 வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டு, 6 லட்சத்து 58 ஆயிரத்து 727 தீர்வுத் தொகையாக தர உத்தரவிடப்பட்டது. குடும்ப வழக்கு கள் 14 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரு வழக்கில் சேர்ந்து வாழ தீர்வு காணப்பட்டது. சமரசத்துக்கு உட்பட்ட குற்றவியல் வழக்குகள் 105 எடுத்துக் கொள்ளப்பட்டு 94 வழக்குகளுக்கு 40 ஆயிரத்து 400 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. காசோலை மோசடி வழக்குகள் 262 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 32 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 93 லட்சத்து ஆயிரத்து 313 வழங்க உத்தரவிடப்பட்டது. மொத்தம் 219 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வுத் தொகையாக மொத்தம் ரூ. 2 கோடியே 55 லட்சத்து 24 ஆயிரத்து 819 வழங்க உத்தரவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x