சட்டப்பேரவை துளிகள்

சட்டப்பேரவை  துளிகள்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கேள்விநேரத்தில் கோரினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ‘‘விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பதிலளித்தார்.

வேளாண்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அமரும் இடத்தில், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தங்கள் நடுவில், தினகரன் ஆதரவாளரான செந்தில்பாலாஜியை அமரவைத்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஆலோசித்தனர். செந்தில்பாலாஜி குனிந்தபடி, கையைக் கட்டிக் கொண்டு இருவர் பேசுவதையும் கூர்மையாக கேட்டபடி இருந்தார்.

கேள்வி நேரத்தின்போது தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அவையை நடத்திக் கொண்டிருந்த பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனிடம், ‘‘எதிர்க்கட்சியில் நீங்கள் இருந்தபோதும், ஆளுங்கட்சியில் உறுப்பினராக பேசும் போதும் உங்கள் வேகத்தை நான் பார்த்திருக்கிறேன். தற்போது பேரவைத்தலைவராக நீங்கள் அமைதியாக அவையை நடத்துகிறீர்கள்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட பேரவை துணைத்தலைவர்,‘‘ உங்களுக்கு நேரம் வேண்டுமானாலும் கூடுதலாக தருகிறேன். பாராட்டு எல்லாம் வேண்டாம்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in