

சென்னை உட்பட 15 மாவட்டங்களில் ரூ.265 கோடியே 37 லட்சத்தில் 2,284 குடியிருப்புகள் கட்டப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்தபோது அமைச்சர் வெளி யிட்ட அறிவிப்புகள் வருமாறு:
பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில்கொண்டு அவர்களின் வீட்டுவசதி தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், வேலூர், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கிருஷ் ணகிரி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கரூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.265 கோடியே 37 லட்சத்தில் 2,284 குடியிருப்புகள் கட்டப்படும்.
சொந்த வீடு கட்டும் திட்டத்தின்கீழ் சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அரசு அலுவலர்களுக்கு குறைந்த விலையில் வாரிய நிலத்தில், வாரிய நிதியிலேயே ரூ.122 கோடியே 50 லட்சத்தில் 248 குடியிருப்புகள் கட்டப்படும். பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணைய நிதியில் இருந்து ரூ.100 கோடி கடன் வழங்கப்படும்.
திட்ட அனுமதிக்காக மக்கள் சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களை நிர்வகிக்க திருப்பூரில் புதிய நகர் ஊரமைப்பு மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அமைக்கப்படும். மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் பயன்பெறும் வகையில் 6.79 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
மக்கள்தொகை நெருக்கத்தை குறைக்கவும், சென்னையைச் சுற்றி அதிவேகமாக நகர்மயமாகி வரும் பகுதிகளின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தை உள்ளடக்கி 8,878 சதுர கி.மீ. அளவில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை கோயம்பேடு அங்காடி வளாகம், தனியார் மற்றும் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, போக்குவரத்து மேம்பாடு மற்றும் மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்படும்.