

கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் பூங்கா பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் காந்தியவாதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந் துள்ளனர்.
கன்னியாகுமரியில் அனைத்து தரப்பினரும் வந்து பார்வையிட்டு செல்லும் முக்கிய நினைவுச் சின்னமாக காந்தி மண்டபம் உள்ளது. அமைதியான இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இந்த மண்டபத்தை தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இலவசமாக பார்வையிடலாம்.
ஆனால், உரிய பாதுகாப்பு இல்லாததால் மண்டபத்தின் மேல்தளத்தில் காதலர்கள் முகாமிடுகின்றனர். அமைதியை சீர்குலைக்கும் கும்பல்களின் நடமாட்டமும் உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த முறை யான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததால் இங்கு வரும் காந்தியவாதிகள் கவலை அடைந்துள்ளனர்.
உபகரணங்கள் சேதம்
காந்தி மண்டபத்தின் தரைதளப்பகுதியில் பாரத மாதாவின் சிலைக்கு மத்தியில் அமைந்துள்ள பூங்கா அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருந்தது. இதனால் குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்கள் குழந்தைகளுடன் இங்கு அமர்ந்து கடல்அழகையும், காந்திமண்டபத்தின் எழிலையும் நீண்ட நேரம் ரசித்துச் செல்வர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பூங்காவில் எவ்வித பராமரிப்பும் இல்லை. அங்கு அமைக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், ராட்டினங்கள், ஊஞ்சல்கள் அனைத்தும் துருப்பிடித்து உடைந்து கிடக்கிறது.
சிமென்ட் இருக்கைகளும் சேதமடைந்து இருந்த இடம் தெரியாமல் உள்ளன. கல்சங்கை சுற்றியுள்ள தொட்டியில் தண்ணீர் சாக்கடை போல் கலங்கலாக இருப்பதுடன் துர்நாற்றமும் வீசுகிறது.
இதில் செருப்பு, பிளாஸ்டிக், கழிவுகள் மற்றும் அழுகிய பொருட்கள் மிதக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு செல்வதை தவிர்க்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ‘‘தேசப்பிதா காந்தியடிகளின் நினைவு மண்டபம் கன்னியாகுமரிக்கு தனி சிறப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நாட்டு நலனுக்காக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்டவை காந்தி மண்டபத்தின் முன்பிருந்து தான் தொடங்குகின்றன.
பாழடைந்து விட்டது
இம்மண்டபத்தை ஒட்டியுள்ள பூங்கா, மக்களுக்கு நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் விதமாக பாரத மாதா சிலையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பூங்கா பாழடைந்து பல ஆண்டு களாகியும் இதை சீரமைக்க சுற்றுலாத்துறையோ மாவட்ட நிர்வாகமோ, மக்கள் பிரதிநிதிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை. காந்தி பிறந்தநாள், நினைவுநாளின் போது மட்டும் தான் காந்தி மண்டபம் அவர்களது நினைவுக்கு வருகிறது.
கன்னியாகுமரியில் உள்ள பல பூங்காக்கள் பயனற்று கிடப்பது போல், காந்தி மண்டபம் பூங்காவும் பாழாகி விட்டதால் மனவேதனை அடைந்துள்ளோம். இதை காலம் கடத்தாமல் உடனடியாக சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.