

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் சந்தீப் சக்சேனா, துறை ரீதியிலான தகவல்களை உடனுக்குடன் நிருபர்களுக்கு தெரியப்படுத்த புதிய ‘வாட்ஸ் அப்’ குழுவை தொடங்கியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது, தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் பத்திரிகை யாளர்களை மட்டுமே கொண்ட, ‘வாட்ஸ் அப்’ (செல்போன் தகவல் தொடர்பு செயலி - APPS) குழுவை அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தொடங்கினார்.
தமிழகத்திலேயே நிருபர்களுடன் தகவலை பரிமாறிக்கொள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரியால் ஏற்படுத்தப் பட்ட முதல் ‘வாட்ஸ் அப்’ குழு அதுதான்.
தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு, அந்தக் குழுவின் பெயரை ‘மீடியா பிரண்ட்ஸ்’ என்று மாற்றி தொடர்ந்து நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப் பேற்றுள்ள சந்தீப் சக்சேனாவும் புதிய ‘வாட்ஸ் அப்’ குழுவை தொடங்கி, அதில் நிருபர்களை சேர்த்து வருகிறார்.
பேஸ் புக் பக்கம்
இதேபோல், பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் பேஸ்புக்கில் பிரத்யேக பக்கத்தையும் (Ceo Tamilnadu) 2012-ம் ஆண்டில் பிரவீண்குமார் தொடங்கினார். அதில் சுமார் 1,700 வாக்காளர்கள் நட்பாக உள்ளனர்.
பேஸ்புக் பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு பிரவீண்குமார் அளிக்கும் விளக்கம், பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது. பதவியில் இருந்து விடைபெறும் நேரத்தில் பேஸ்புக் கணக்கை மூடிவிடாமல், அதை சந்தீப் சக்சேனாவிடம் ஒப்படைத்துள்ளார்.
தேர்தல் துறையைப்போல மற்ற அரசுத் துறைகளும் ‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’ போன்ற நவீன தகவல் தொடர் சேவைகளை பின்பற்றினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.