

‘‘ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின் பொதுமக்கள் பயன்படுத்தும் 81 சதவீத பொருட்களின் விலை உயரக் கூடாது. இதனை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்,’’ என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக இணைச் செயலாளர் பி.ஆனந்த் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பொருளாதாரம் முன்னேறும்
மத்திய அரசின் மூலம் பொருளாதார திருப்பு முனையாக சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டு முதல் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டதை நாம் கண்கூடா கப் பார்த்தோம். ஒரே நாடு, ஒரே வரி எனும் சரக்கு மற்றும் சேவை வரி கொண்டு வரப்பட்டதன் மூலம் பொருளாதாரம் விரைந்து முன்னேறும்.
உலகில் 164 நாடுகளில் இதுபோன்ற வரி விதிப்பு அமலில் உள்ளது. நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கு ஜிஎஸ்டியால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஜிஎஸ்டி வரி முறை குறித்து குறைகளை கேட்டறிந்து அறிக்கை அனுப்ப, நாடு முழுவதும் உள்ள 631 மாவட்டங்களை, 166 மண்டலங்களாக பிரித்து, மத்திய அரசில் பணியாற்றும் இணை செயலாளர்கள் நிலையிலான அலுவலர்களை நியமித்துள்ளனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள சந்தேகங்கள், குறைகளை கேட்டறிந்து, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளது.
பழைய வரி விகிதங்களில் காலாண்டுக்கு ஒரு முறை வரி செலுத்துவது, அரையாண்டுக்கு ஒருமுறை ரிட்டன் தாக்கல் செய்யும் நடைமுறை மாற்றப்பட்டு, தற்போது மாதம் தோறும் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு பெற விண்ணப்பிக்க வேண்டும்.
ஆட்சியர் கண்காணிப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி அதிகரிக்கக் கூடாது. இதை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் மத்திய, மாநில அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கோட்ட மத்திய கலால் இணை ஆணையர் என்.நரேஷ், உதவி ஆணையர் பாண்டியராஜன், திருநெல்வேலி மண்டல வணிகவரி இணை ஆணையர் தேவேந்திர பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
இதுபோல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கூட்டத்தில் பி.ஆனந்த் பேசும்போது, ``ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குப் பின், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 81 சதவீத பொருட்கள் விலை உயரக் கூடாது. விலைவாசி கட்டுப்படுத் தப்பட வேண்டும் என்பதற்காகவே ஜிஎஸ்டி வரி முறை பின்பற்றப்படு கிறது,” என்றார். மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி வணிகவரி துணை ஆணையர் ப.மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.