

கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள கதிராமங்கலம் கிராமப்பகுதிகளில் 11 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் கச்சா எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டன. இக்கிணறுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
2002 ல் அமைக்கப்பட்டு தொடர்ந்து 15 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இப்பகுதிகளில் தொடர்ந்து கச்சா எண்ணெய் எடுத்து வந்ததால் இப்பகுதி நீர் நிலைகள் மாசு படுகிறது, குடிநீரில் ரசாயனம் மற்றும் எண்ணெய் படலம் படர்ந்துள்ளது, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது, விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறது, விவசாயத்தொழில் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் முறையான தொடர் பராமரிப்பு பணிகள் நடைபெறாதது தான்.
மேலும் 15 ஆண்டுகளாக இப்பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுப்பதால் இனிமேல் இப்பகுதிகளில் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என இப்பகுதி வாழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பொது மக்களின் எதிர்ப்பை மீறி ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
எனவே இப்பகுதி பொது மக்கள் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
நேற்று 30.06.2017 கதிராமங்கலத்தில் உள்ள கச்சா எண்ணெய் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் செய்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது. நியாயமான போரட்டத்தை மேற்கொண்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பிரச்சனையில் தமிழக அரசு மெத்தனப்போக்கை கைவிட்டு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வற்புறுத்த வேண்டும்.
எனவே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுப்பதால் ஏற்பட்டுள்ள மக்கள் பிரச்சனைகளை முக்கியப் பிரச்சினையாக கருதி அதற்கேற்ப ஓன்ஜிசி நிறுவனத்துக்கு கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.