Published : 30 Jul 2017 08:47 AM
Last Updated : 30 Jul 2017 08:47 AM

சென்னையில் மாணவர் விடுதி விழா: சமுதாயத்தில் மேன்மையோடு வாழ கல்வியே அட்சய பாத்திரம் - மாணவர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை

சமுதாயத்தில் மேன்மையோடு வாழ கையில் இருக்கும் அட்சய பாத்திரம் கல்வி என்று ஆதி திராவி டர் மாணவர் விடுதி விழாவில் ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்பு கூறியுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் அமைந்துள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் ரூ.1 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள விவேகானந்தர் அரங்கம், போதி அரங்கம் மற்றும் அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்க உதவியுடன் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி கள் தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு முன்னிலை வகித்தார்.

விவேகானந்தர் அரங்கை ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகி சுவாமி தர்மிஷ்தானந்தா வும், போதி அரங்கை அம்பேத்கர் மக்கள் படை நிறுவனர் மு.மதி பறையனாரும், அம்பேத்கர் விளையாட்டு அரங்கை தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்புவும் திறந்துவைத்தனர்.

தொடக்க விழாவில் இறையன்பு பேசியதாவது:

மாணவர்களின் திறன்களை மேம்படுத்த வகுப்பறைப் பயிற்சி அளிக்கும் வகையில் போதி அரங்கமும், மனதை ஒழுங்குபடுத்த உதவும் யோகா பயிற்சி அளிக்க விவேகானந்தர் அரங்கமும் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன.

ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க

இந்த விடுதியில் தங்கி யிருந்து படிக்கும் மாணவர்கள், கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களாகவும், முதல்தலை முறை பட்டதாரிகளாகவும் இருப்பீர்கள். உங்கள் திறமை களை மேம்படுத்த, ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க இங்குள்ள நூலகத்தையும் இதர வசதிகளை யும் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தினமும் ஒரு மணி நேரம் நூல் கள் படித்தால் மொழியறிவு, அறிவுத்திறன் வளர்வதுடன் தன்னம்பிக்கையும் வளரும். யாரும் புறக்கணிக்க முடியாத நிலைக்கு உயர வேண்டுமானால் அது கல்வியறிவால் மட்டுமே முடியும். சமுதாயத்தில் மேன்மையோடு வாழ கையில் இருக்கும் அட்சய பாத்திரம் கல்வி. அறிவால்தான் அம்பேத்கர் தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. ஒருசிலருக்கு வசதி வாய்ப்புகள் இருக்கிறதே, நமக்கு வசதிகள் குறைவாக உள்ளதே என ஒரு போதும் நினைக்க வேண்டாம். கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன் படுத்திக்கொண்டு சமுதாயத் துக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

இவ்வாறு இறையன்பு கூறினார்.

விடுதியில் உள்ள அயோத்தி தாசர் நூலகத்துக்கு “மாடர்ன் ரெபரென்ஸ் என்சைக்ளோபீடியா” 20 தொகுதிகளை சிண்டிகேட் வங்கி ஊழியர் சங்க கவுரவ தலைவர் எம்.எஸ்.என்.ராவ் நன்கொடையாக வழங்கினார்.

முன்னதாக, விடுதி மாணவர் குழு தலைவர் விக்ரம் வரவேற்றார். நிறைவாக, விடுதி காப்பாளர் ஆர்.கருப்பையா நன்றி கூறினார். விழாவில், ஆதி திராவிடர் நலத்துறை நலக்குழு உறுப்பினர் எஸ்.கே.சிவா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் மற்றும் விடுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x