

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, பூந்தமல்லி நெடுஞ்சாலையின் கீழ், 100 அடி ஆழத்தில் 70 ஆயிரத்து 60 சதுர அடியில், சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் பிரமாண்டமாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.400 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.
ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் இங்கு பணி செய்து வருகின்றனர். பீகாரைச் சேர்ந்த அம்ரேந்தர் ராம் (32) என்பவரும் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணி நடை பெற்றது. இரவு 8.30 மணி யளவில் அம்ரேந்தர் ராம் உள்ளிட்ட தொழிலாளர்கள் இரும்பு கம்பிகளை மேலிருந்து சுரங்கப் பாதைக்குள் கொண்டு சென்றனர்.
அப்போது, கீழே நின்று பணி செய்த அம்ரேந்தர் ராம் மீது ராட்சத இரும்பு கம்பி தவறி விழுந்தது.
இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து பெரியமேடு போலீ ஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.