தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
Updated on
2 min read

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 528 பேரூராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இத்தனை உள்ளாட்சி மன்றங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் மேம்பாட்டிற்கும் பேருதவியாக செயல்படுவார்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கான பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட 6 மாத காலத்திற்குள் உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்று பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இச்சூழலில் தமிழக அரசு உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்த முறையான இட ஒதுக்கீடு வழங்காத காரணத்தால், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீட்டை இன்னும் சரிவர முடிவுக்கு கொண்டுவரவில்லை. எனவே தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்துவதில் ஒருங்கிணைந்து, ஒரு தலைப்பட்சமாக, காலம் தாழ்த்துகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் தமிழக அரசு கடந்த 9 மாத காலமாக உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்தாமல் அதிகாரிகளை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சிக்கு அதிகாரிகளின் மூலம் பணிகளை செய்வதால், உள்ளூர் மக்கள் அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைகளை தெரிவிக்க தயக்கம் ஏற்படுவதோடு, மக்கள் தேவைகளையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

காரணம் உட்கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்துவதிலும் ஆர்வம் காட்டவில்லை. இச்சூழலில் தற்போது தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளை வரையறை செய்வதற்கு புதிய சட்ட மசோதாவை பேரவையில் நிறைவேற்றியிருக்கிறது. இது தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டுவதாகவும், பலவீனமாக இருப்பதையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

எனவே தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உடனடியாக உள்ளாட்சிக்கு தேர்தலை நடத்த வேண்டும். மேலும் தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு காலம் தாழ்த்தாமல் தன்னிச்சையாக, சுதந்திரமாக செயல்பட்டு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியது தமிழக தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருக்கிறது.

தற்போது மழைக்காலம் என்பதால் கிராமம் முதல் நகரம் வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேக்கம், கழிவு, குப்பைகளை அகற்றுதல், கொசு ஒழிப்பு, மருந்து தெளித்தல், தண்ணீர் பிரச்சினை ஆகிய முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உள்ளாட்சியின் பிரதிநிதிகள் மூலம் எளிதில் பணிகளை மேற்கொள்ள முடியும்.

உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளை கொண்டு உள்ளூர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மக்கள் நலன் காக்கவும் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி தேர்தலை உரிய காலத்தில், முறையாக நடத்த வேண்டியது தான் ஜனநாயகத்தில் மாநில அரசின் கடமை.

எனவே தமிழக அரசு உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தலை உடனடியாக நடத்த நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கு நியாயமாக தீர்வு கண்டு, முழு ஒத்துழைப்பு நல்கிடவும் மற்றும் தேர்தல் ஆணையமும் இட ஒதுக்கீட்டு முறையை உள்ளாட்சி தேர்தலில் முறையாக, முழுமையாக அமல்படுத்தி ஒரு காலக்கெடுவிற்குள் தேர்தலை விரைந்து நடத்திடவும் முன்வர வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in