Published : 05 Jul 2017 01:14 PM
Last Updated : 05 Jul 2017 01:14 PM

அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள்: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பள்ளியில் குளிர்சாதன வசதி, மின்னணு மேடைகள், கேமராக்கள், கூடுதல் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் சட்டத் துறை சார்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

1. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இப்பல்கலைக்கழகத்திற்கு குளிர்சாதன வசதி, மின்னணு மேடைகள், கணினி ஒலி வீச்சுகள், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றுடன் 1,040 மாணவர்கள் அமரக் கூடிய வகையில் 20 விரிவுரை அறைகள், இயக்குநர் அறை, அலுவலக அறைகள், ஆசிரியர் அறைகள், கௌரவ ஆசிரியர் அறைகள், கருத்தரங்க கூடம், மாதிரி நீதிமன்றக் கூடம், ஆவண அறைகள் மற்றும் மாணவியருக்கான பொது ஓய்வறை ஆகியவற்றை உள்ளடக்கி, தரை மற்றும் இரண்டு தளங்களை கொண்ட கூடுதல் கட்டடம் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

2. மதுரை அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வருகின்ற மாணவர்களுக்கு கருத்தரங்குகள், சிறப்பு சட்ட வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விழாக்கள் மற்றும் பட்டமளிப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தற்போதைய கலையரங்கில் போதுமான இடவசதி இல்லாததை கருத்தில் கொண்டு, புதிய கலையரங்கம் ஒன்று முதல் தளத்திலும், நூலகக் கட்டடத்தில் உள்ள இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, புதிய நூலகக் கட்டடத்தை தரை தளத்திலும் உள்ளடக்கிய புதிய கட்டடம் 8 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

*

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

மழைக் காலங்களில் மண்பாண்டங்கள் செய்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் 4,000 ரூபாய் மழைக் கால பராமரிப்பு உதவித் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, மண்பாண்ட தொழிலாளர்களின் மழைக் கால பராமரிப்பு உதவித் தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் 4,000 ரூபாய், இனி 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 12,236 குடும்பங்கள் பயன் பெறுவர். அரசுக்கு இதனால் ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 22 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x