

தமிழகத்தில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு கடந்த மே 4-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில், தமிழகத்தில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த மனை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னர் பதிவுத்துறையில் பதிவு செய்த அங்கீகாரமற்ற மனைகளை மட்டுமே வரன்முறைப்படுத்த முடியும்.
வரன்முறைப்படுத்துவதற்காக மனை உரிமையாளர்கள் விண்ணப்பிக்க இணையதள வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. அரசாணையின்படி மனைகளை வரன்முறை செய்தால் மட்டுமே, அங்கு வீடு கட்டி குடியேற முடியும். வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த அரசாணை வெளியான 2017 மே 4 முதல் 6 மாதங்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 13 லட்சம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் உள்ளன. மனைகளை வரன்முறை செய்ய அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த 13 லட்சம் மனைகளின் உரிமையாளர்களும் விண்ணப்பித்தால், அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் அரசாணை வெளியிட்ட அரசு, இந்த புதிய வசதி குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால் அரசாணை வெளியாகி ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், சுமார் 6 ஆயிரம் பேர் மட்டுமே வரன்முறைப்படுத்த விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து இந்திய கட்டுநர்கள் சங்க கவுரவ செயலாளர் ராம்பிரபு மேலும் கூறியதாவது:
அரசுக்கு வருவாய் தரும் இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. நகரமைப்பு துறையினர்தான் மக்களிடம் இதுபற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் மக்களும் பயன்பெறுவார்கள். மேலும், விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த 2007-ஐ காலக்கெடுவாக நிர்ணயம் செய்த அரசு, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த 2016-ஐ நிர்ணயித்துள்ளது.
இந்த 10 ஆண்டு இடைவெளியில் அங்கீகாரமற்ற மனையில் விதிமீறல் வீடுகளை கட்டியவர்களால் வரன்முறைப்படுத்த முடியாது. நிலத்தை மட்டுமே வரன்முறைப்படுத்த முடியும். எனவே, இரண்டையும் வரன்முறைப்படுத்த வாய்ப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நகரமைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக பலமுறை செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்’’ என்றனர்.
குறிப்பிட்ட காலத்துக்குள் மனைகளை வரன்முறைப்படுத்தவில்லை என்றால் அந்த மனைகளில் கட்டிடம் கட்ட அனுமதி கிடைக்காது, குடிநீர், மின்சார இணைப்பு பெறமுடியாது. மேலும் 1908-ம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் கீழ் மனைகளை பதிவு செய்ய முடியாது. வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 3-ம் தேதி ஆகும்.