

ஓஎன்ஜிசி நிர்வாகம் நிரந்தரமாக வெளியேற வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கதிராமங்கலத்தில் 4-வது நாளாக நேற்றும் கடையடைப்புப் போராட் டம் தொடர்ந்தது.
‘தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும். போராட்டம் நடத்திய கதிராமங்கலம் மக்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதைக் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்டவர் களை எவ்வித நிபந்தனையு மின்றி விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி 4-வது நாளாக நேற்றும் அப்பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடை பெற்றது.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, 90 வாக னங்களில் கருப்புக் கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை வெளிப் படுத்தினர். எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நேற்று 20 போலீஸார் மட்டுமே கதிராமங்கலத் தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அவர்களும் ஓஎன்ஜிசி எண்ணெய்க் கிணறு அமைந்துள்ள பகுதியில் மட்டுமே இருந்தனர்.
கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், ஓஎன்ஜிசி நிர்வாகம் ஊரைவிட்டு நிரந்தரமாக வெளியேற வலியுறுத்தியும் கும்ப கோணம் அரசு தன்னாட்சிக் கல் லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில மாணவர்கள் கல்லூரி வளா கத்தில் உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கும்பகோணம் உதவி ஆட்சியர் பிரதீப்குமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஓஎன்ஜிசி நிறுவனம் கிராமத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள வழக் கறிஞர்கள், நேற்று நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்ததுடன் நீதிமன்றத்தின் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலம் செல்வோம்
இதுகுறித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் மா.ராஜசேகர் கூறும்போது, “ஓஎன்ஜிசி நிறுவனம் உடனே வெளியேற வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர்கள் ஒரு வாரம் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம். அப்பகுதி மக்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வழக்கறிஞர்களையும் ஒன்றிணைத்து கதிராமங்கலம் சென்று போராட்டத்தில் ஈடுபடு வோம்” என்றார்.
இதற்கிடையே, திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கதிராமங்கலம் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார்.
கூட்டத்துக்குப் பின் அவர் கூறியது: இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெறும். இந்த கூட்டத்தால் யாருக்கும் வெற்றி தோல்வி என்பது கிடையாது. கதிராமங்கலத்தில் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்படும் என்பது குறித்து அந்த நிறுவனத்திடம் தகவல் கேட்டுப் பெறப்படும். அக்கிராம மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு வழங்கியுள்ளனர் அது பரிசீலிக்கப்படும். அந்த ஊரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. எனவே, காவல் துறையினர் அங்கு பெயரளவுக்கு மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் வெறும் 6 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
கும்பகோணம் அரசு தன்னாட்சி கலைக் கல்லூரியில் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய உதவி ஆட்சியர் பிரதீப்குமார்.