

சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய ரூ.2,000 கோடி நிலுவைத் தொகையை தமிழக அரசு பெற்று தரக் கோரி கரும்பு விவசாயிகள் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இப்போராட்டத்திற்கு தலைமை வகித்த அந்த சங்கத்தின் மாநில தலைவர் கே.வி.ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் தமிழக கரும்பு விவசாயிகளிடம் இருந்து 2013-14, 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய 4 பருவங்களில் கொள்முதல் செய்த கரும்பிற்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளன.
விவசாயிகளுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் சர்க்கரை ஆலைகள் இழுத்தடிப்பு செய்கின்றன. இதற்காக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இருப்பினும் எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும். ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து உடனடியாக பெற்று தர வேண்டும்.
இதுமட்டுமின்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை விவசாய கடன் தள்ளுபடி சம்பந்தமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், அனைத்து விவசாயிகளின் அனைத்து விதமான வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.